தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் Majid Al-Suwaidi அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் Majid Al-Suwaidi அவர்கள்,   (ANSA)

கடவுள், நம்மைவிட மிகவும் பொறுமையுள்ளவர்

இஸ்பெயின் நாட்டிற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதராகப் பணியாற்றும் Majid Al-Suwaidi அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“கடவுள், நம்மைவிட மிகவும் பொறுமையுள்ளவர், அவரது இதயத்தை, நம்பிக்கை மற்றும், விடாமுயற்சியோடு தட்டுகிறவர்கள், ஏமாற்றம் அடையமாட்டார்கள்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27, இவ்வெள்ளியன்று, இறைவேண்டல் (#Prayer) என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

புதிய கர்தினால்கள்

மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 13 கர்தினால்களை, நவம்பர் 28, இச்சனிக்கிழமை, உரோம் நேரம் மாலை நான்கு மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், கர்தினால்கள் அவையில் இணைக்கும் திருவழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றி, புதிய கர்தினால்களுக்கு தொப்பி, மோதிரம் ஆகியவற்றை வழங்குவார்.

அத்துடன், திருவருகைக்காலம் முதல் ஞாயிறாகிய, நவம்பர் 29, இஞ்ஞாயிறு, உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், புதிய கர்தினால்களோடு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்19 கொள்ளைநோய் நிலவரத்தை மனதில்கொண்டு, இவ்விரு நிகழ்வுகளிலும் மிகக் குறைந்த பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும், இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, கர்தினால்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஜெனோவா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், இஸ்பெயின் நாட்டிற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதராகப் பணியாற்றும் Majid Al-Suwaidi ஆகியோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர், 

27 November 2020, 14:25