தேடுதல்

Vatican News
கர்தினால்கள் அவையில் புதயவர்களை இணைக்கும் சடங்கு - கோப்புப் படம் கர்தினால்கள் அவையில் புதயவர்களை இணைக்கும் சடங்கு - கோப்புப் படம் 

நவம்பர் 28ல் கர்தினால்கள் அவையில் இணைக்கும் சடங்கு

புதிதாக அறிவிக்கப்பட்ட 13 கர்தினால்களில், ப்ருனேயி அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியான பேராயர் கொர்னேலியுஸ் சிம் அவர்களும், பிலிப்பீன்ஸ் நாட்டின் கப்பீஸ் பேராயர், ஹோஸே அத்வின்குலா அவர்களும், கோவிட்-19 நெருக்கடியின் காரணமாக, வத்திக்கானுக்கு வருகை தரமாட்டார்கள்

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 28, வருகிற சனிக்கிழமை, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 13 கர்தினால்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்கள் அவையில் இணைக்கும் சடங்கு நடைபெறும் என்று, வத்திக்கான் தகவல் துறையின் தலைவர், மத்தேயோ ப்ரூனி அவர்கள் அறிவித்தார்.

அறிவிக்கப்பட்ட 13 கர்தினால்களில், ப்ருனேயி அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியான பேராயர் கொர்னேலியுஸ் சிம் அவர்களும், பிலிப்பீன்ஸ் நாட்டின் கப்பீஸ் பேராயர், ஹோஸே அத்வின்குலா அவர்களும், கோவிட்-19 நெருக்கடியின் காரணமாக, வத்திக்கானுக்கு வருகை தரமாட்டார்கள் என்று ப்ரூனி அவர்கள் கூறினார்.

இவ்விருவரும் நேரடியாக வர இயலவில்லையெனினும், அவர்களும் கர்தினால்களாக இணைக்கப்படுவர் என்றும், அவர்களுக்குரிய தொப்பி, மோதிரம் மற்றும் கர்தினாலுக்குரிய சான்றிதழ் ஆகியவற்றை, ஏற்புடைய காலத்தில் அவர்களிடம் சேர்க்கப்படும் என்றும் ப்ரூனி அவர்கள் கூறினார்.

நவம்பர் 28, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் கர்தினால்களின் இணைப்புச் சடங்கில், இதில் பங்கேற்க இயலாத இரு கர்தினால்களும், கணணி வழியே கலந்துகொள்வார் என்றும், நவம்பர் 29, ஞாயிறு காலை 10 மணிக்கு அதே பெருங்கோவிலில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில், புதிதாக இணைக்கப்பட்ட கர்தினால்கள் மட்டும் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளைநோய் நிலவரத்தை மனதில் கொண்டு, இவ்விரு நிகழ்வுகளிலும் மிகக் குறைந்த பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும், இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, கர்தினால்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 November 2020, 13:57