தேடுதல்

கோவிட்-19 காலத்தில் அர்ஜென்டீனாவில் பிறரன்பு கோவிட்-19 காலத்தில் அர்ஜென்டீனாவில் பிறரன்பு   (ANSA)

கொள்ளைநோய் காலத்தில் ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க..

இலத்தீன் அமெரிக்காவில், கோவிட்-19 கொள்ளைநோய் பற்றி நடைபெற்ற இணையவழி கூட்டத்தை, இலத்தீன் அமெரிக்க திருத்தந்தை அவை, சமுதாய அறிவியல் திருத்தந்தை கழகம், இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவை ஆகிய மூன்றும் இணைந்து நடத்தின

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிநிலை, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோரின் அவலத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க திருஅவைக்கு அனுப்பிய காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

“இலத்தீன் அமெரிக்கா: திருஅவை, திருத்தந்தை பிரான்சிஸ், கொள்ளைநோய் நெருக்கடிகள்” என்ற தலைப்பில், நவம்பர் 19 இவ்வியாழனன்று தொடங்கிய, இரண்டு நாள் மெய்நிகர் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரும், குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோர், மாண்புள்ள ஒரு வாழ்வு வாழ்வதற்கு, இந்த இணையவழி கூட்டம் தூண்டுதலாக அமையும் என்ற தன் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.      

விளிம்புநிலையில் உள்ளோர் என்ற நான் குறிப்பிடுகையில், அவர்களுக்கு தர்மம் கொடுக்கவேண்டும் என்று கூறவில்லை, மாறாக அவர்களின் நிலை புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்காவில் அனைவரையும் ஏற்கனவே கடுமையாய் பாதித்துள்ள சமுதாய-பொருளாதார அநீதிகள், மற்றும், ஏனைய பிரச்சனைகளை, கோவிட்-19 கொள்ளைநோய், மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.  

தற்போதைய கொள்ளைநோயின் பாதிப்புக்களை ஏற்கனவே எதிர்கொள்ளும் சகோதரர், சகோதரிகள், தங்களைச் சுற்றியுள்ள சூழலியல் அமைப்பும் கடுமையாய்ப் பாதிப்படைந்திருப்பதற்குச் சான்றுகளாக உள்ளனர் என்றுரைத்துள்ள திருத்தந்தை,  காட்டுத் தீயால், அமேசான் பருவமழைக் காடுகளும், பெருவாரியான சதுப்புநிலங்களும் அழிக்கப்பட்டுவருவதை, கவலையோடு குறிப்பிட்டார்.    

இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலத்தீன் அமெரிக்கத் திருஅவை, குடியிருப்பு, நிலம், வேலை ஆகியவை இன்றி துன்புறும் மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 20, இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இந்த இணையவழி கூட்டத்தை, இலத்தீன் அமெரிக்க திருத்தந்தை அவை, சமுதாய அறிவியல் திருத்தந்தை கழகம், இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவை (CELAM) ஆகிய மூன்றும் இணைந்து நடத்தின.

20 November 2020, 14:38