தேடுதல்

அனைவரும் உடன்பிறந்தோர் திருமடல் பற்றிய கருத்தரங்கு அனைவரும் உடன்பிறந்தோர் திருமடல் பற்றிய கருத்தரங்கு 

திருத்தந்தை: துன்புறுத்தப்படும் மக்களை நினைக்கின்றேன்

வயதுவந்த குடிமக்கள் ஒவ்வொருவரும், எவ்வித வரையறையும் இன்றி, ஒரு குறிப்பிட்ட நிதியுதவியைத் தவறாமல் பெறும் முறையில், நிலையான வைப்பு நிதித் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு அரசுகளுக்கு அழைப்பு – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நல்ல சமாரியரைப்போல், நம் அயலவர் மீது அக்கறை காட்டவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 'Fratelli Tutti' என்ற ஹாஷ் டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 24, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"நல்ல சமாரியாரிடம் விளங்கிய உடன்பிறந்த உணர்வு மற்றும், கவனம் ஆகியவற்றுடன், ஒவ்வொரு ஆண் மற்றும், பெண், இளையவர் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரின் தேவைகளையும் தீர்த்துவைப்போம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

திருத்தந்தை துன்புறுத்தப்படும் மக்கள் பற்றி நினைக்கின்றேன்

மேலும், வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ள நூல் ஒன்றில், நாடுகளில் துன்புறுத்தப்படும் மக்களை, குறிப்பாக, Rohingya, Uyghur, மற்றும், Yazidi ஆகிய இன மக்களை அடிக்கடி நினைத்துப் பார்க்கின்றேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Austen Ivereigh என்ற எழுத்தாளரின் துணையுடன், “கனவு காண்போம்: சிறந்த வருங்காலத்திற்குப் பாதை” (Let Us Dream: The Path to a Better Future) என்ற தலைப்பில் வெளியாகவுள்ள 150 பக்கங்கள் கொண்ட நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நூலில், இஸ்லாமிய நாடுகளில் துன்புறும் மக்கள் பற்றிய பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மியான்மார் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ள Rohingya இன முஸ்லிம்கள், ஈராக்கில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் கொல்லப்படும் Yazidi இன மக்கள், சீனாவில் துன்புறும் Uyghur சிறுபான்மை இன முஸ்லிம்கள் ஆகியோர் பற்றி கூறியுள்ளார்.

வயதுவந்த குடிமக்கள் ஒவ்வொருவரும் எவ்வித வரையறையும் இன்றி, ஒரு குறிப்பிட்ட நிதியுதவியை, தவறாமல் பெறும் முறையில், நிலையான வைப்பு நிதித் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, கொரோனா கொள்ளைநோய் ஒழிக்கப்பட்டபின் இடம்பெறும், சமத்துவமின்மைகளைக் களைவதற்கு, பொருளாதார, சமுதாய மற்றும், அரசியல் ஆகிய துறைகளில் மாற்றங்கள் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இந்த கொள்ளைநோய் முடிவுற்ற காலத்தில், ஊதியமின்றி இருக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் நிலையை உணரவேண்டியது மிகவும் முக்கியம் என்றும், திருத்தந்தை அந்நூலில் கூறியுள்ளார்.

Austen Ivereigh என்ற எழுத்தாளரின் துணையுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள இந்நூல், வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், அதன் ஒருசில பகுதிகள், இத்தாலிய நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், திருத்தந்தையின் இந்த சிந்தனைகள் பதிவாகியுள்ளன.

சீனாவில் வதைப்போர் முகாம்களில், Uyghur இன முஸ்லிம்கள்,  சித்ரவதைகள், உணவு மற்றும் மருந்துகள் மறுக்கப்படுதல், மற்றும், அரசியல் கருத்தியல்களை ஏற்குமாறு வலியுறுத்தப்படுதல் போன்ற கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

24 November 2020, 13:45