தேடுதல்

Teutonico கல்லறையில் திருப்பலி Teutonico கல்லறையில் திருப்பலி  (Vatican Media)

இறைபதம் சேர்ந்த கர்தினால்கள், ஆயர்களுக்காக திருப்பலி

வத்திக்கான் அருங்காட்சியகம், காஸ்தெல்கந்தோல்ஃபோ பாப்பிறை மாளிகையிலுள்ள அருங்காட்சியகம், தொல்பொருள் ஆய்வு அலுவலகம் ஆகிய அனைத்தும், நவம்பர் 05, இவ்வியாழக்கிழமையிலிருந்து பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும் - திருப்பீடம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 04, இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வழங்கிய மறைக்கல்வியுரையை மையப்படுத்தி, பொது மறைக்கல்வியுரை (#UdienzaGenerale) என்ற ஹாஷ்டாக்குடன், டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இறைவேண்டலின் ஆசிரியராகிய இயேசு கிறிஸ்துவின் பள்ளியில் நம்மை இருத்துவோம். இறைவேண்டல் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் கடவுளுக்குச் செவிமடுப்பது மற்றும், அவரைச் சந்திப்பதாகும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம். மேலும், அது, விடாமுயற்சியுடன் பழகவேண்டிய ஒரு கலையாகும். அனைத்தும் கடவுளிடமிருந்து வருகின்றன மற்றும், அவை அவரிடமே திரும்பிச் செல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் இடமுமாகும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

நவம்பர் 5ல் திருத்தந்தை திருப்பலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 05, இவ்வியாழன் உரோம் நேரம் பகல் 11 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், இந்த ஆண்டில் இறைவனடி சேர்ந்த கர்தினால்கள் மற்றும், ஆயர்களுக்காக திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் அருங்காட்சியகம்

கோவிட்-19 கொள்ளைநோய் பரவலின் காரணமாக, இத்தாலிய அரசு அதிகாரிகள் மேற்கொண்டுவரும் நலவாழ்வு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில், வத்திக்கான் அருங்காட்சியகம், காஸ்தெல்கந்தோல்ஃபோ பாப்பிறை மாளிகையிலுள்ள அருங்காட்சியகம், தொல்பொருள் ஆய்வு அலுவலகம் ஆகிய அனைத்தும், நவம்பர் 05, இவ்வியாழன் முதல், வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

04 November 2020, 15:50