தேடுதல்

புதிய கர்தினால்கள் அவை (அக்டோபர் 2019  ) புதிய கர்தினால்கள் அவை (அக்டோபர் 2019 ) 

விண்ணகம், நமக்கென்று தயாரிக்கப்பட்டுள்ள மிக அழகான இடம்

13 புதிய கர்தினால்களுடன், கத்தோலிக்கத் திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 229. இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 128

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக முடிவு, மற்றும், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலகவாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி, கடந்த சில வாரங்களாக, திருவழிபாடுகளில் நாம் தியானித்துவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், விண்ணகம் பற்றி சிந்திப்பதற்கு நமக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“நாம் எவ்வித குறிக்கோளோ, இறுதி இலக்கோ இன்றி வாழ்ந்துகொண்டிருக்கவில்லை, நாம் காத்திருக்கிறோம், நாம் விலைமதிப்பற்றவர்கள், மதிப்பும், அழகும், மிகுந்த இடத்தை, கடவுள், நமக்கென்று தயாரித்து வைத்துள்ளார், அதுவே விண்ணகம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த, 13 புதிய கர்தினால்களை, நவம்பர் 28, இச்சனிக்கிழமை, உரோம் நேரம் மாலை நான்கு மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், கர்தினால்கள் அவையில் இணைக்கும் திருவழிபாட்டை நிறைவேற்றி, அவர்களுக்கு தொப்பி, மோதிரம் ஆகியவற்றை வழங்குகிறார்.

இப்புதிய 13 கர்தினால்களுடன், கத்தோலிக்கத் திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 229 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆகவும் மாறியுள்ளன.

திருஅவையின் மொத்த கர்தினால்களுள், 51 பேர், 26 துறவு சபைகளைச் சார்ந்தவர்கள். இவர்களில்  29 பேர், எண்பது வயதுக்குட்பட்டவர்கள். 22 பேர், எண்பது வயதைக் கடந்தவர்கள்.

ப்ருனேயி (அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியான கர்தினால் கொர்னேலியுஸ் சிம்), மால்ட்டா (கர்தினால் Mario Grech), ருவாண்டா (கர்தினால் Antoine Kambanda) ஆகிய மூன்று நாடுகளைச் சார்ந்தவர்கள், நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது கர்தினால்கள் அவையில், தொன்னூறு நாடுகளைச் சார்ந்தவர்கள் கர்தினால்களாக உள்ளனர்.

இச்சனிக்கிழமையன்று, கர்தினால்கள் அவையில் புதிதாக இணையும் 13 கர்தினால்களுள், ஒன்பது பேர் எண்பது வயதுக்குட்பட்டவர்கள்.

அத்துடன், திருவருகைக்காலம் முதல் ஞாயிறாகிய, நவம்பர் 29, இஞ்ஞாயிறு, உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், புதிய கர்தினால்களோடு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2020, 14:22