தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், யுனெஸ்கோ இயக்குனர் Audrey Azoulay (கோப்புப்படம்  2018.12.17)  திருத்தந்தை பிரான்சிஸ், யுனெஸ்கோ இயக்குனர் Audrey Azoulay (கோப்புப்படம் 2018.12.17)  

அறிவியல் வளர்ச்சிகள் மனிதருக்குப் பயன்பட..

உலகில் அமைதி மற்றும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு, அறிவியல் ஆற்றிவரும் பங்கையும், அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும், பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில் அறிவியல் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அறிவியல் துறையில் இடம்பெறும் வளர்ச்சிகள், மனிதரை மையப்படுத்தியதாய் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அறிவியல் நாள் (#WorldScienceDay) என்ற ஹாஷ்டாக்குடன், இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 10, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளையொட்டி, திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “அறிவியல் மற்றும், நம்பிக்கைக்கு இடையே இடம்பெறும் உரையாடலால், சமுதாயம் செறிவூட்டப்படுகின்றது. இது, சிந்தனைகளுக்கு புதிய எல்லைகளைத் திறந்துவிடுகின்றது, அறிவியல் வளர்ச்சிகள் பற்றி தெளிவுபடுத்துவதற்கு நம்பிக்கையின் ஒளி தேவைப்படுகின்றது. இதனால், அந்த வளர்ச்சிகள், மனிதரின் முக்கியத்துவத்தை மதிக்கும்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.   

அறிவியல் உலக நாள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், கல்வி, அறிவியல் மற்றும், கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் உலக நாளை, 2001ம் ஆண்டில் உருவாக்கியது. அந்த நாள், 2002ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் பத்தாம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

உலகில், அமைதி மற்றும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு, அறிவியல் ஆற்றிவரும் பங்கையும், அன்றாட வாழ்வில் அறிவியலின்  முக்கியத்துவத்தையும், பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில், அறிவியல் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது என்று, யுனெஸ்கோ கூறியுள்ளது.

மேலும், அறிவியல் ஆய்வுகள், நாடுகளுக்கு இடையே பகிர்ந்துகொள்ளப்படுவதற்கும், அவை, சமுதாயங்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுவதற்கும், தேசிய மற்றும், பன்னாட்டு ஒருமைப்பாட்டையும், அர்ப்பணத்தையும், இந்த உலக நாள்  ஊக்குவிக்கின்றது என்றும், யுனெஸ்கோ அமைப்பு கூறியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும், அறிவியல் ஆய்வு மையங்கள் மற்றும், அறிவியல் அருங்காட்சியகங்கள் உருவாக்குவது பற்றி கவனம் செலுத்தப்படவேண்டும் என்று, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட, அறிவியல் உலக நாளில் வலியுறுத்தப்பட்டது என்றும், யுனெஸ்கோ அமைப்பு கூறியுள்ளது. (UN)

10 November 2020, 15:07