தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 281020 புதன் மறைக்கல்வியுரை 281020  (Vatican Media)

திருத்தந்தை - கைம்மாறு கருதாமல் உதவிசெய்யுங்கள்

சிசிலித் தீவில் நடத்தப்படும், "இரக்கத்தின் சிறிய இல்லம்" என்ற மையத்தில், துன்புறுவோருக்கு நற்பணியாற்றும் அனைவரோடும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மடல் வழியாக தனது அருகாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

எதிர்பார்ப்பு எதுவுமின்றி மற்றவருக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 07, இச்சனிக்கிழமையன்று, அனைவரும் உடன்பிறந்தோர் (#FratelliTutti) என்ற ஹாஷ்டாக்குடன், டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டார்.

“நாம் அனைவரும் கைம்மாறு கருதாமல் கொடுக்கக்கூடியவர்கள், மற்றவர்கள், நம்மை நன்றாக நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பின்றி, அவர்களுக்கு நன்மை செய்யக் கூடியவர்கள். ‘கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் (மத்.10:8)’ என்று, இயேசு தம் சீடர்களிடம் கூறினார்” என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

"இரக்கத்தின் சிறிய இல்லம்"

மேலும், இத்தாலியின் சிசிலித் தீவில், Gela எனும் நகரில் செயல்படும், "இரக்கத்தின் சிறிய இல்லம்" என்ற மையத்தில், துன்புறுவோருக்கு நற்பணியாற்றும் அனைவரோடும் தனது அருகாமையை வெளிப்படுத்தும் மடல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இந்த இல்லத்தை நடத்திவரும் அருள்பணி Pasqualino Di Dio அவர்களின் நற்பணிகளை ஊக்குவித்து, தன் கைப்பட மடல் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "Raphael" என்ற கூட்டுறவு அமைப்போடு இணைந்து, சிறிய மருத்துவ இல்லம், உறங்கும் இடம், தையல் பயிற்சி, தச்சுப்பட்டறை, வெண்மண்பாண்ட தொழில்கூடம் உட்பட, பல்வேறு உதவிகளை, சமுதாயத்தில் நலிந்தோருக்கு ஆற்றிவருவதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த இல்லத்தில் இடைவிடாமல் நடைபெறும் திருநற்கருணை ஆராதனை, இவர்களின் நற்பணிகளுக்கு ஆதாரமாக இருந்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, புறக்கணிப்பு மற்றும், சந்தேகம் ஆகிய கலாச்சாரங்கள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில், பிறர் மீது அக்கறையை ஊக்குவித்து வருவதற்கும், ஆண்டவர் நம்மைக் கைவிடவில்லை என்ற நம்பிக்கையில், வாழ்வைப் பிறருக்காக அர்ப்பணித்து பணியாற்றி வருவதற்கும், நன்றி கூறியுள்ளார்.

2013ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதன் முதலில் பொதுவில் நிறைவேற்றிய திருப்பலியில் பங்குகொண்ட, சிசிலித் தீவின் Piazza Armerina என்ற ஊரைச் சேர்ந்த இளம் அருள்பணியாளர் Pasqualino Di Dio அவர்கள், தன் மறைமாவட்டத்தின் Gela நகரில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.

அச்சமயத்தில், கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக, சிறிய இல்லம் ஒன்றை அமைத்து, அதற்காக வாழ்வை அர்ப்பணிக்குமாறு அருள்பணியாளர் Pasqualino Di Dio அவர்களிடம், திருத்தந்தை கூறிய அறிவுரையின் பயனாக, 2013ம் ஆண்டில் "இரக்கத்தின் சிறிய இல்லம்" உருவானது. அந்த இல்லம், தற்போது உள்ளூர் காரித்தாஸ், பங்குத்தளங்கள் மற்றும், பக்த கழகங்களின் ஆதரவோடு, உணவு வங்கி நடத்தி வருகிறது. அதோடு, அந்த இல்லத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள், உளவியல் ஆலோசனைகள் வழங்குவது, குடும்பங்களில் தியானங்கள் நடத்துவது, சிறார் கல்விக்கு உதவுவது போன்ற பணிகளையும் ஆற்றி வருகின்றனர். 

07 November 2020, 14:27