தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

போரைத் தவிர்ப்பதற்கு சோர்வின்றி பணியாற்ற அழைப்பு

உலக மக்களில் ஏறத்தாழ ஐந்தில் ஒருவர், எளிதில் நோய்தொற்றும் இடங்கள், போர் அல்லது வன்முறை இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்றனர் – ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

போர் மற்றும், ஆயுத மோதல்களில், சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடுக்கும் உலக நாள், நவம்பர் 06, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த உலக நாளையும் (#EnvironmentConflictDay), அனைவரும் உடன்பிறந்தோர் (#FratelliTutti) என்ற தனது திருமடலையும் மையப்படுத்தி, இரு ஹாஷ்டாக்குகளுடன், இவ்வெள்ளியன்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

“போர் என்பது, அனைத்து உரிமைகளையும் புறக்கணிப்பதாகும் மற்றும், சுற்றுச்சூழல் மீது உணர்வற்று தாக்குதல் நடத்துவதாகும். அனைவருக்கும் உண்மையான ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை நாம் விரும்பினால், போரைத் தவிர்ப்பதற்கு நாம் அயராது உழைக்கவேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.  

போர் மற்றும் ஆயுத மோதல்களால், வேளாண்மை, நீர் வளங்கள், தண்ணீர் விநியோகம், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற சேதங்களைத் தவிர்ப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குமென, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2001ம் ஆண்டில், இந்த உலக நாளை உருவாக்கியது.

அந்தோனியோ கூட்டேரஸ்

இந்த உலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், போரும், சுற்றுச்சூழலும், ஒன்றோடொன்று மிகவும் தொடர்புடையவை, இன்று உலகில் இடம்பெறும் ஆயுத மோதல்களில், குறைந்தது நாற்பது விழுக்காடு, இயற்கை வளங்களை முன்னிட்டு இடம்பெறுகின்றன என்று கூறினார்.   

காலநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் வெப்பநிலையும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது, உலகில் கடும் வறுமையில் வாழ்கின்ற மக்களில் ஏறத்தாழ எண்பது விழுக்காட்டினர், போர்கள் இடம்பெறும் பகுதிகளில் உள்ளனர் என்றும் கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.   

போர் மற்றும், ஆயுத மோதல்களில், சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடுக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில், உலக மக்களில் ஏறத்தாழ ஐந்தில் ஒருவர், எளிதில் நோய்தொற்றும் இடங்கள், போர் அல்லது வன்முறை இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்றனர், 2030ம் ஆண்டுக்குள் வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, போரின் பாதிப்புக்களிலிருந்து நம் பூமிக்கோளத்தைக் காப்பதற்கும், போர்களைத் தவிர்ப்பதற்கும் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று கூட்டேரஸ் அவர்கள் உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

06 November 2020, 15:01