தேடுதல்

புதிய அருளாளர் Michael McGivney புதிய அருளாளர் Michael McGivney  

அருளாளர் McGivney, மலைப்பொழிவு பேறுகளை வாழ்ந்து காட்டியவர்

Knights of Columbus அமைப்பு, 1882ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Connecticut மாநிலத்தில், New Haven நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பில், தற்போது உலக அளவில், இருபது இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 31, இச்சனிக்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில், இறையடியார் Michael McGivney அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டது குறித்த தன் மகிழ்ச்சியையும், நவம்பர் 01, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

நற்செய்தியாளரான புதிய அருளாளர் McGivney அவர்கள், ஏழைகளின் தேவைகளுக்குச் செவிமடுத்து, பிறரன்பு நடவடிக்கைகளை பெருமளவில் ஊக்கமூட்டியவராக இருந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மறைமாவட்ட அருள்பணியாளராகப் பணியாற்றிய அருள்பணி McGivney அவர்கள், Knights of Columbus என்ற, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பைத் துவக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைப்பொழிவு பேறுகளை வாழ்ந்து காட்டியவர்

மேலும், Knights of Columbus உலகளாவிய அமைப்பை உருவாக்கிய, McGivney அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டதற்கு, நவம்பர் 01, இஞ்ஞாயிறன்று, நன்றி திருப்பலி நிறைவேற்றிய, பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி (William Lori) அவர்கள்,  இவர், மலைப்பொழிவு பேறுகளை வாழ்ந்து காட்டியவர் என்று கூறினார்.

உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் இந்த அமைப்பு முதலில் உருவாக்கப்பட்ட, New Haven புனித மரியா ஆலயத்தில், இத்திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் லோரி அவர்கள், புனிதத்துவ வாழ்வை வாழ்வதற்கு ஏங்குபவர்களுக்கு, அருளாளர் McGivney அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

Knights of Columbus அமைப்பு

அமெரிக்க ஐக்கிய நாட்டில், 1882ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட Knights of Columbus அமைப்பு, தற்போது உலக அளவில், இருபது இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2018ம் ஆண்டில், இந்த உலகளாவிய அமைப்பிலுள்ள 16 ஆயிரம் கிளைகள், 18 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான டாலரை பிறரன்புப் பணிகளுக்குகென வழங்கியுள்ளன. அதே ஆண்டில், அதன் தன்னார்வலர்கள், 7 கோடியே 60 இலட்சத்திற்கு அதிகமான மணி நேரங்களை பிறரன்புப் பணிகளுக்கென்று செலவழித்துள்ளனர்.  

2017 மற்றும், 2018ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த அமைப்பு, இருபது இலட்சம் டாலரைத் திரட்டி, ஈராக் நாட்டின் Karamlesh நகருக்கு வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியின் வழியாக, இந்த அமைப்பு, ஐ.எஸ். இஸ்லாம் அமைப்பின் படுகொலைத் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்த கிறிஸ்தவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

இந்த அமைப்பைச் சார்ந்த ஆறு மெக்சிகோ நாட்டினர், 1926ம் ஆண்டுக்கும், 1929ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற Cristero போர் மற்றும், அதற்குப் பின் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)    

01 November 2020, 12:37