தேடுதல்

புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், ஆயர் மார்செல்லோ செமெராரோ, திருத்தந்தையுடன் புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், ஆயர் மார்செல்லோ செமெராரோ, திருத்தந்தையுடன்  

புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கென 134 பெயர்கள்

ஒரு புதுமை, 127 பேரின் மறைசாட்சிய மரணம், 6 பேரின் புண்ணியத்துவ வாழ்வு ஆகியவை குறித்த விவரங்களை ஏற்றுக்கொண்டு, ஒப்புதல் அளித்துள்ளார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரும், அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவருமான, ஆயர் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், நவம்பர் 23, இத்திங்கள் பிற்பகலில், திருத்தந்தையைச் சந்தித்து, 7 இறையடியார்கள், மற்றும், ஸ்பெயின் நாட்டில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட 127 பேரின் வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

இத்தாலியில் மறைமாவட்ட அருள்பணியாளராகப் பணியாற்றி, தன் 44ம் வயதில் 1945ம் ஆண்டு உயிர்நீத்த இறையடியார் Mario Ciceri அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமை குறித்த விவரங்களையும், இஸ்பெயின் நாட்டில் 1936க்கும் 1939க்கும் இடைப்பட்ட காலத்தில் திருமறைக்காக கொலைசெய்யப்பட்ட அருள்பணியாளர், இறையடியார்  Giovanni Elia Medina, மற்றும், அதே காலத்தில் கொலையுண்ட 126 இறையடியார்கள் குறித்த விவரங்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், ஆறு இறையடியார்களின் புண்ணிய பண்புகள் நிறைந்த வாழ்வு பற்றிய விவரங்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவர்களை, புனிதர்களாகவும், அருளாளர்களாகவும் உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இத்தாலியில் பிறந்து 1954ம் ஆண்டு உயிர்நீத்த இறையடியார், பேராயர் Fortunato Maria Farina, இஸ்பெயினில் பிறந்து 1923ம் ஆண்டு உயிரிழந்த இறையடியார், அருள்பணி Andrea Manjón y Manjón, பிரான்சில் பிறந்து 1999ம் ஆண்டு இத்தாலியில் உயிர்நீத்த இறையடியார், அருள்பணி Alfonso Ugolini, இத்தாலியில் பிறந்து 1922ம் ஆண்டு உயிரிழந்த இறையடியார், அருள்சகோதரி Maria Francesca Ticchi, இத்தாலியில் பிறந்து கென்யாவில் பணியாற்றி திரும்பும்வேளையில் 1925ம் ஆண்டு உயிரிழந்த இறையடியார், அருள்சகோதரி Maria Carola Cecchin, மற்றும், இத்தாலியில் பிறந்து உயிரிழந்த இறையடியார், அருள்சகோதரி Maria Francesca Giannetto ஆகியோரின் புண்ணிய வாழ்வு குறித்து ஆய்வு செய்த விவரங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களை, புனிதர்களாகவும், அருளாளர்களாகவும் உயர்த்தும் வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

24 November 2020, 13:56