தேடுதல்

பிலிப்பீன்ஸ் வெள்ளப்பெருக்கு பிலிப்பீன்ஸ் வெள்ளப்பெருக்கு   (AFP or licensors)

பிலிப்பீன்ஸ், ருமேனியாவில் பாதிக்கப்பட்டோருடன் அருகாமை

ஞாயிறன்று தேசிய அமைதி நாளை சிறப்பித்த ஐவரி கோஸ்ட் நாட்டில், ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ளவும், அமைதி பேச்சு வார்த்தைகள் இடம்பெறவும் திருத்தந்தை அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் அருகாமையையும், ருமேனியாவில் கோவிட் நோயாளிகளை வைத்திருந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கவலையையும், ஐவரி கோஸ்ட் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற ஆவலையும், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த நான்கு வாரங்களில் ஏற்பட்ட இரண்டு பெரும்புயல்கள் உட்பட, ஆறு புயல்களால் பாதிக்கப்பட்டு 67 பேரின் உயிரிழப்புகளையும், நாட்டின் பெரும்பகுதியில் வெள்ளைப் பெருக்கையும் சந்தித்துவரும் பிலிப்பீன்ஸ் நாட்டின் மக்களுடன் தன் அருகாமையை அறிவிப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளப் பெருக்கால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ள ஏழைமக்களுடன் தன் ஒருமைப்பாட்டை வெளியிடுவதாகவும் கூறினார்.

ருமேனியாவின் Piatra Neamt என்ற நகரிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சைப்பிரிவில் இச்சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீவிபத்தில் பத்துபேர் உயிரிழந்துள்ளது, மற்றும், பத்து பேர் படுகாயமுற்றுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டோருடன் தன் அருகாமையை அறிவிப்பதாகவும், அவர்களுக்காக தன்னோடு இணைந்து மற்றவர்களும் செபிக்குமாறும்  கேட்டுக்கொண்டார்.

மேலும், தேசிய அமைதி நாளை சிறப்பித்த ஐவரி கோஸ்ட் நாட்டில், ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ளவும், அமைதி பேச்சு வார்த்தைகள் இடம்பெறவும் வேண்டும் என  தான்  அழைப்பு விடுப்பதாக உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அன்புநிறைந்த நாட்டின் புதல்வரும் புதல்வியரும், நாட்டில், ஒப்புரவுக்கும், ஒன்றிணைந்த வாழ்வுக்கும் இணைந்து உழைக்குமாறும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர் Alassane Quattara அவர்கள் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளதாக இம்மாதம் 9ம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, நாட்டில் வன்முறை இடம்பெற்றுவருகின்றது. தேர்தல் தொடர்புடைய வன்முறைகளால் இதுவரை, குறைந்தது, 16பேர் உயிரிழந்துள்ளனர், எட்டாயிரம் பேர், அண்மை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

15 November 2020, 13:01