பயங்கரவாதம், வெறுப்புக்குப் பலியான அப்பாவி மக்களுக்காக
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள நூலகத்திலிருந்து நவம்பர் 04, இப்புதன் காலையில், மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுரையின் இறுதியில், இந்த வாரத்தில் ஐரோப்பாவில் பயங்கரவாதம் மற்றும், காழ்ப்புணர்வுக்குப் பலியானவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்தார்.
ஐரோப்பாவின் நீஸ் மற்றும், வியன்னா நகரங்களில் இடம்பெற்றுள்ள இரத்தம் சிந்தும் கடுமையான தாக்குதல்களால் துன்புறுவோரை நினைவுகூர்ந்து செபித்த திருத்தந்தை, மிகுந்த வேதனையளிக்கும் இந்த நிகழ்வுகள், மதங்களுக்கு இடையே உடன்பிறந்த உணர்வுகொண்ட ஒத்துழைப்பிற்கு, இணக்கமான தீர்வு ஒன்று காணப்படுவதற்கு அழைப்பு விடுக்கின்றன என்று கூறினார்.
இந்த நாள்களில், இறந்த அனைவரையும் நினைத்துச் செபிக்கின்றோம், பயங்கரவாதத்திற்குப் பலியாகியுள்ள ஆதரவற்ற உள்ளங்களையும் நினைவுகூர்வோம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த தாக்குதல்கள், ஐரோப்பாவில் கொடூரங்களைப் பரவச்செய்கின்றன என்றுரைத்தார்.
பிரான்ஸ் நாட்டின் தெற்கேயுள்ள நீஸ் நகரில் வழிபாட்டுத்தலத்திற்குள்ளே இடம்பெற்றுள்ள கடுமையான தாக்குதல் மற்றும், வியன்னாவின் தெருக்களில் இத்திங்கள் இரவு இடம்பெற்றுள்ள தாக்குதல்களை, தான் சிறப்பாக குறிப்பிடுவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.
அக்டோபர் 30, கடந்த வெள்ளியன்று, நீஸ் நகரின் நோத்ரு தாம் அன்னை மரியா பசிலிக்காவில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 02, வியன்னா நகரின் முக்கிய யூதத் தொழுகைக்கூடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.