இறைநெருக்கமும், விழிப்புடன் இருத்தலும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கடவுள் நமக்கு வெகு நெருக்கமாக்க உள்ளார் என்பதை உணர்ந்தவர்களாக, விழிப்புடன் நாம் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில், 13 பேர் புதிதாக கர்தினால்களாக உயர்த்தப்பட்ட இச்சனிக்கிழமையின் வழிபாட்டுக் கொண்டாட்டத்திற்குப்பின், இஞ்ஞாயிறு காலையில் 11 கர்தினால்களுடன் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கு மிக நெருக்கமாக வருவதுடன், நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு சேவையாற்றுபவர்களாகவும் செயல்படவேண்டும் என விசுவாசிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
புரூனே நாட்டின் புதிய கர்தினால் கொர்னேலியுஸ் சிம், பிலிப்பீன்சின் புதிய கர்தினால் ஹோசே அத்விங்குலா (Jose Advincula) ஆகிய இருவரும், கோவிட் -19 கொள்ளை நோய் கட்டுப்பாடுகள் காரணமாக உரோம் நகருக்கு பயணிக்க முடியாத நிலையில், ஏனைய 11 புதிய கர்தினால்களுடன் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செபத்திற்கான ஆவலையும், அன்புகூர்வதற்குரிய தேவையையயும் நம்மில் தூண்டுமாறு இறைவனை நோக்கி வேண்டுவோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாராமுகம் எனும் இருளிலிருந்து நம்மை தட்டி எழுப்புமாறு இறைவனை நோக்கி செபிப்போம் எனவும் விண்ணப்பித்தார்.
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன்று கர்தினால்களுடன் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், அந்நாளின் முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கும் இறைநெருக்கம் குறித்தும், நற்செய்தி வாசகத்தில் இயேசு வலியுறுத்தும், விழிப்புடன் இருத்தல் குறித்தும் தன் சிந்தனைகளை மறையுரையில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
இறைநெருக்கம்
நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கிவந்த இறைவனின் நெருக்கத்தை அதிகம் அதிகமாக உணரும் காலம் இந்த திருவருகைக் காலம் என்பதையும் தன் மறையுரையில் நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விசுவாசத்தின் முதல்படி என்பது, இறைவன் நமக்குத் தேவை என்பதையும், அவர் நமக்கு அருகிலிருக்க வேண்டிய தேவையையும் உணர்ந்துகொள்வது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவே இத்திருவழிபாட்டு ஆண்டின் திருவருகைக்காலம் தரும் முதல் செய்தி என மேலும் உரைத்தார்.
நமக்கு நெருக்கமாக வர ஆவல்கொள்ளும் இயேசு, தன்னை நம் வாழ்வில் திணிப்பதில்லை, மாறாக, அவரை வரவேற்கும் விருப்பத்தை நம்மிடமே விட்டுவிடுகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விழிப்புடனிருத்தல்
நமதருகில் வரும்படி கடவுளிடம் நாம் விண்ணப்பித்தோம் என்றால், அவர் உதவியோடு விழிப்பாயிருக்க நாம் பயிற்சிபெறுவோம் எனக்கூறியத் திருத்தந்தை, பல ஆயிரம் விடயங்களால் நம் கவனம் சிதறி, கடவுளை மறந்திருக்கும் வாழ்வில், விழிப்புடன் செயல்படவேண்டியது மிக முக்கியத்துவம் நிறைந்தது என அழைப்புவிடுத்தார்.
இருள் மற்றும் சோர்வின் மத்தியில் விழிப்புடன் நாம் காத்திருக்கும்போது, பகலின் ஒளி நம்மிடையே மலர்வதுடன், நாமும் இறைவனுக்கு நெருக்கமாக இருப்போம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரவில் விழிப்புடன் காத்திருப்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணுலகை நோக்கிய நம் வாழ்வில் மண்ணுலக சுகங்களும், பெருமையும் அவசியமற்றவை, ஏனெனில், அவை ஒரு நாள் மறைந்துபோகும், எனவும் எடுத்துரைத்தார்.
நம்பிக்கையில் வாழ்வது, விசுவாசத்தின் வல்லமை, செபத்தின் தேவை, பிறரன்புடன் செயல்படுதல் ஆகியவை குறித்தும் தன் மறையுரையில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையால் புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, வத்திக்கானில் அவர் தங்கியிருக்கும் இல்லத்தில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.