தேடுதல்

உரோம் இலத்தீன் அமெரிக்க திருத்தந்தை பயஸ் கல்லூரி உரோம் இலத்தீன் அமெரிக்க திருத்தந்தை பயஸ் கல்லூரி   (Vatican Media)

உடன்வாழ் சகோதரர்களுக்கு இதயக்கதவை திறங்கள்

உரோம் நகரில் அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்க திருத்தந்தை பயஸ் கல்லூரியின் ஏறத்தாழ ஐம்பது பிரதிநிதிகளை, நவம்பர் 20, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம்மில் தமது உறைவிடத்தை அமைக்க விரும்பி, அயராமல் நம் இதயக்கதவைத் தட்டிக்கொண்டிருக்கும் கடவுளுக்கும், குழுவில் உடன்வாழ்கின்ற சகோதரர்களுக்கும்,  இதயக்கதவை எப்போதும் திறந்து வைத்திருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க அருள்பணியாளர்களிடம், இவ்வெள்ளியன்று கூறினார்.

உரோம் நகரில் அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்க திருத்தந்தை பயஸ் கல்லூரியின் ஏறத்தாழ ஐம்பது பிரதிநிதிகளை, நவம்பர் 20, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தனிப்பட்ட வாழ்விலும், குழும வாழ்விலும் கடைப்பிடிக்கப்படவேண்டிய மூன்று கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்.

கடவுளுக்கும், உடன்வாழும் சகோதரர்களுக்கும் இதயக்கதவைத் திறந்துவைத்தல், உரோம் நகருக்கு கல்வி பயில அனுப்பிய கடவுளுக்கு ஏற்றவகையில், அருள்பணித்துவ வாழ்விற்குப் பிரமாணிக்கமாக வாழ்தல், நம் சமுதாயத்தைப் பாதித்துள்ள தீமைகளை ஒழிக்க உழைத்தல் ஆகிய மூன்று கூறுகள் பற்றி திருத்தந்தை விளக்கினார்.

தற்போதைய கொள்ளைநோய், உலக அளவில், எல்லைக் கட்டுப்பாடின்றி அனைவரையும் கடுமையாய்ப் பாதித்திருக்கும் தீமையாக உள்ளது என்றும், இந்த கொள்ளைநோய் முன்னிறுத்தும் துன்பங்களைச் சமாளிக்க இயலாமல் திணறுகின்றோம் என்றும் கூறியத் திருத்தந்தை, இந்நிலையில், இவ்வுலகம், தொடர்ந்து தன் கதவுகளை மூடிக்கொண்டுள்ளது, உரையாடலையும், ஒத்துழைப்பையும் புறக்கணிக்கின்றது, பாரபட்சமின்றி அனைவரையும் சென்றடையும் பொதுநலனுக்கு உண்மையுடன் அர்ப்பணிப்பதற்கு மறுத்துவருகிறது என்று கூறினார்.

இந்த தீமையை ஒழிப்பதற்கு, மனநிலையில் மாற்றம் அவசியம் என்றும், கல்வி, மறைக்கல்வி மற்றும், சமுதாய அர்ப்பணம் ஆகியவற்றில் தெளிவான நடைமுறைத் திட்டங்கள் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உடன்பிறந்தநிலைக்குச் சான்றுகளாக வாழுமாறு, அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

இலத்தீன் அமெரிக்க மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி, தங்களின் கிறிஸ்தவப் பாரம்பரிய மற்றும், கலாச்சாரத்திற்குச் சான்றுகளாய் வாழ்ந்து வருகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, அருள்பணியாளர்களும், சிறந்த முறையில் பயிற்சிபெற்று, அந்தக் கண்டத்தின் இறைமக்களுக்குப் பணியாற்றுமாறு கூறினார்.

திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், உரோம் நகரில் இலத்தீன் அமெரிக்க அருள்பணியாளர்கள் தங்கி இறையியல் கல்வி கற்பதற்கு உதவியாக, கல்லூரி ஒன்றை ஆரம்பிக்கும் பணியை, இயேசு சபையினரிடம் ஒப்படைத்தார். அதன்படி அந்த கல்லூரி, 1858ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி தொடங்கப்பட்டது.

20 November 2020, 14:26