தேடுதல்

திருத்தந்தை, கென்ய அரசுத்தலைவர் Kenyatta திருத்தந்தை, கென்ய அரசுத்தலைவர் Kenyatta   (Vatican Media)

திருத்தந்தை, கென்ய அரசுத்தலைவர் Kenyatta சந்திப்பு

கென்ய அரசுத்தலைவர் Kenyatta அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 06, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் திருத்தந்தையின் நூலகத்தில் சந்தித்து, கலந்துரையாடினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கென்யா நாட்டு அரசுத்தலைவர் Uhuru Muigai Kenyatta அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 06, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை 10.20 மணிக்கு, வத்திக்கானில் திருத்தந்தையின் நூலகத்தில் சந்தித்து, ஏறத்தாழ 25 நிமிடங்கள் கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு வெளியுறவு திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார், கென்ய அரசுத்தலைவர்.  

இச்சந்திப்புக்கள் பற்றி அறிக்கை வெளியிட்ட திருப்பீட தகவல் தொடர்பகம், கென்யாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், கென்ய சமுதாயத்திற்கு, குறிப்பாக, கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் போன்ற தலைப்புகள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று கூறியுள்ளது.     

கென்யாவின் தற்போதைய நிலவரம், அந்நாடு, ஆப்ரிக்க கண்டத்திற்கும், மற்ற நாடுகளுக்கும் ஆற்றிவரும் பணிகள், கென்யாவில் கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிநிலை, காலநிலை மாற்றம், புலம்பெயர்ந்தோர் போன்ற தலைப்புக்களிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.    

பரிசுப்பொருள்கள்

கென்யா பற்றிய ஒரு நூல், அந்நாட்டில் தயாரிக்கப்படும் காப்பி மற்றும், பாதாம் பருப்பு, சிங்கம், தன் பிள்ளைகளை அரவணைப்பது போன்ற ஒரு சிலை ஆகியவற்றை கென்ய அரசுத்தலைவர் Kenyatta அவர்கள், திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புனித பேதுரு பெருங்கோவில் மற்றும், கோபுரம் ஆகியவற்றின் அமைப்பை வெளிப்படுத்தும் வண்ண கலைப்பொருள் ஒன்றையும், லொரேத்தோ அன்னை மரியா வேளாண்மை அமைப்பு தயாரித்த ஒலிவ எண்ணெய்யையும், 2020ம் ஆண்டின் அமைதி நாள் செய்தி மற்றும், திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும், கென்ய அரசுத்தலைவருக்கு பரிசாக அளித்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள, கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யா, 1963ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது.

மேலும், நவம்பர் 06, இவ்வெள்ளியன்று, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் Luis Francisco Ladaria Ferrer அவர்களும், திருத்தந்தையைச் சந்தித்து கலந்துரையாடினார்.

06 November 2020, 14:59