தேடுதல்

Vatican News
புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் Maradona அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் Maradona அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (AFP or licensors)

மறைந்த Maradona அவர்களுக்காக செபித்துவந்த திருத்தந்தை

Maradona அவர்களை, அண்மைய ஆண்டுகளில் சந்தித்த தருணங்களை திருத்தந்தை அன்புடன் நினைவுகூர்ந்தார், மற்றும், அவர் இதயம் தொடர்பான நோயினால் துன்புறுவதை அறிந்த நேரம் முதல், அவருக்காக திருத்தந்தை செபித்து வந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 25, இப்புதனன்று, தன் 60வது வயதில் உயிர் நீத்த புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர், Diego Armando Maradona அவர்களை தன் செபங்களில் நினைவுகூர்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

Maradona அவர்களை, அண்மைய ஆண்டுகளில் சந்தித்த தருணங்களை திருத்தந்தை அன்புடன் நினைவுகூர்ந்தார் என்றும், அவர் இதயம் தொடர்பான நோயினால் துன்புறுவதை அறிந்த நேரம் முதல், அவருக்காக திருத்தந்தை செபித்து வந்ததாகவும், வத்திக்கான் தகவல் தொடர்பு மையத்தின் தலைவர், மத்தேயோ ப்ரூனி அவர்கள் இப்புதன் மாலையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

2014ம் ஆண்டு, செப்டம்பர் 4ம் தேதி, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட விளையாட்டிற்கு வந்திருந்த, Maradona அவர்கள், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தையைச் சந்தித்து, அவருக்கு, புகழ்பெற்ற 10ம் எண் பொறித்த கால்பந்தாட்ட சீருடையை வழங்கினார்.

அதேவண்ணம், இளையோரை பல்வேறு வழிகளில் ஊக்குவிக்க, திருத்தந்தையின் பெயரால் நிறுவப்பட்டுள்ள Scholas Occurrentes என்ற உலகளாவிய ஓர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் கலந்துகொள்ள 2015ம் ஆண்டு வருகை தந்த Maradona அவர்கள், திருத்தந்தையை மீண்டும் சந்தித்தார்.

1960ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி, வறுமைமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த Maradona அவர்கள், தன் விளையாட்டுத் திறமை, மற்றும், கடின உழைப்பால், உலகப்புகழ் பெறும் அளவு கால்பந்தாட்ட துறையில் தன் முத்திரையைப் பதித்தார்.

1986ம் ஆண்டு, அவரது 26வது வயதில், ஆர்ஜென்டீனா நாட்டின் கால்பந்தாட்டக் குழுவின் தலைவனாக, உலகக்கோப்பையை வென்றது, Maradona அவர்கள் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

மதுவுக்கும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் பழக்கப்பட்டு, தன் உடல்நலனையும், நற்பெயரையும் இழந்த Maradona அவர்கள், இறுதி ஆண்டுகளில், இப்பழக்கங்களிலிருந்து விடுபட்டார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

20ம் நூற்றாண்டின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் Maradona அவர்கள், இறுதி நாள்களில், இதயம் தொடர்பான உடல் நலக்குறைவால், 2020ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டின் Buenos Aires நகருக்கருகே, Tigre என்ற நகரில் உயிர் நீத்தார்.

26 November 2020, 14:51