தேடுதல்

மூவேளை செபவுரை - 151120 மூவேளை செபவுரை - 151120  (ANSA)

ஏழைகளை நோக்கி நம் உதவிக் கரங்களை நீட்டுவோம்

வித்தியாசமான திறமைகள் வழங்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும், அத்திறமைகளைக்கொண்டு, இறைவனுக்கும், நம் சகோதரர், சகோதரிகளுக்கும் பணியாற்ற, அழைக்கப்பட்டுள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளைக்கொண்டு நன்மைகளை ஆற்றுபவர்களுக்கு இறைவன் வெகுமதியளிக்கிறார் என இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத் 25:14-30) மேற்கோள் காட்டி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாலந்து உவமைபற்றி பேசும் மத்தேயு நற்செய்தி பகுதியைக்குறித்து தன் சிந்தனைகளை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நின்றிருந்த மக்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளுமுன் தன் மூன்று பணியாளர்களிடம், அவரவரின் தகுதிக்கு ஏற்ப தலைவர் கொடுத்துச் சென்றதைப்போல், இறைவனும், நம் தகுதிக்கு ஏற்றார்போல் நமக்கு கொடைகளை வழங்கியுள்ளார் என்று கூறினார்.

பணத்தைக் கொடுத்து அதனை முதலீடு செய்யச் சொன்ன தலைவர் திரும்பி வந்தபோது, நன்முறையில் பலன்தரும்படி பயன்படுத்திய இருவரையும் பாராட்டுவதையும், தலைவருக்குப் பயந்து அதனை ஒளித்துவைத்து காப்பாற்றியவர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவதையும் காண்கிறோம், என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உவமையானது,  ஒவொருவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்றார்.

ஏழைகளை நோக்கி நம் பார்வையைத் திருப்பி நம் உதவிக்கரங்களை நீட்டவேண்டும் என்ற அழைப்பைவிடுக்கும் வறியோர் உலக நாளில், இந்த உவமை சிறப்பான விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வித்தியாசமான திறமைகள் வழங்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும், அத்திறமைகளைக்கொண்டு இவ்வுலகில் நன்மைகளை ஆற்றவும், இறைவனுக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் பணியாற்றவும் அழைக்கப்பட்டுள்ளோம், என்றுரைத்த திருத்தந்தை, ஏழைகளை நோக்கி நம் பார்வையை திருப்புவோம், ஏனெனில், இன்றைய உலகில் ஏழைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது என்றார்.

இன்றைய உலகில் பசி பட்டினியை அதிகம் அதிகமாகக் காண்கிறோம், ஏன், நகர் மையங்களில்கூட பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆனால் நாமோ, அவர்களைக் கண்டும் காணாமல், பாராமுகமாகச் செல்கிறோம், ஆனால் அந்த ஏழைதான் கிறிஸ்து என்பதை உணர்ந்து நாம் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகளுக்காக வந்த இயேசு, ஏழைகளிடம் உரையாட நமக்கு கற்றுத்தந்துள்ளார் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

15 November 2020, 12:53