தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 111120 புதன் மறைக்கல்வியுரை 111120  (Vatican Media)

McCarrick பற்றிய திருப்பீட அறிக்கை குறித்து திருத்தந்தை

"திருஅவை பணியாளர்களால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான ஒவ்வொருவரோடும் என் அருகாமையையும், இந்தத் தீமையை வேரோடு நீக்குவதற்கு திருஅவையின் அர்ப்பணத்தையும் நான் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறேன்" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் கர்தினால் Theodore McCarrick அவர்களைப் பற்றிய அறிக்கையொன்று, நவம்பர் 10, இச்செவ்வாயன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 11, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

"முன்னாள் கர்தினால் Theodore McCarrick அவர்களைப் பற்றிய அறிக்கையொன்று இச்செவ்வாயன்று வெளியானது. இவ்வேளையில், திருஅவை பணியாளர்களால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான ஒவ்வொருவரோடும் என் அருகாமையையும், இந்தத் தீமையை வேரோடு நீக்குவதற்கு திருஅவையின் அர்ப்பணத்தையும் நான் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறேன்" என்று திருத்தந்தை கூறினார்.

ஆழ்ந்த வருத்தம் தோய்ந்த குரலில் இதனை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சில நொடிகள் மெளனமாக செபித்தார்.

2018ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த ஓர் ஆணையின்படி, McCarrick அவர்களைப்பற்றிய முழுமையான விசாரணை வத்திக்கானில் துவங்கப்பட்டது. ஈராண்டளவாக நீடித்த இந்த விசாரணையின் முடிவாக, 461 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்று, நவம்பர் 10, பிற்பகலில் வெளியிடப்பட்டது.

2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 20ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்களுக்கு வெளியிட்ட ஒரு மடலின் சொற்கள் இந்த அறிக்கையின் இறுதியில் பதிவாகியுள்ளன.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரின் துன்பங்களைக் கேட்கும்போது, திருத்தூதர் பவுல் கூறியுள்ள சொற்களான "ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும்" (1கொரி. 12:26) என்ற சொற்களே என் உள்ளத்திலும் எதிரொலிக்கின்றன என்று திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ள சொற்கள், இவ்வறிக்கையின் இறுதியில் இடம்பெற்றுள்ளன. 

1986ம் ஆண்டு முதல் 2000மாம் ஆண்டு முடிய நெவார்க் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவந்த McCarrick அவர்களை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், வாஷிங்டன் பேராயராக பணிமாற்றம் செய்யவிழைந்த வேளையில், அவரைப்பற்றிய ஒரு சில புகார்கள் மறைமுகமாக எழுப்பப்பட்டன.

2017ம் ஆண்டு முடிய, McCarrick அவர்களால் பாதிக்கப்பட்ட எவரும் அதிகாரப்பூர்வமான புகார்களை அளிக்க முன்வராததால், அவர், வாஷிங்டன் பேராயராகவும், கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டு, 2006ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

2017ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் துவங்கிய விசாரணைகளின் விளைவாக, 2018ம் ஆண்டு, தன் கர்தினால் நிலையிலிருந்து McCarrick அவர்கள் விலகியதையடுத்து, 2019ம் ஆண்டு, அவரது அருள்பணித்துவ நிலையும் நீக்கப்பட்டது.

11 November 2020, 14:42