தேடுதல்

Vatican News
கிறிஸ்து அரசர் விழா திருப்பலி - 221120 கிறிஸ்து அரசர் விழா திருப்பலி - 221120  (ANSA)

விண்ணுலகை நோக்கி, கடவுளின் கனவுகளை நனவாக்கும் பாதை

வாழ்வில் எடுக்கும் முடிவுகளில், நாம் கடவுளைத் தேர்வுசெய்யும்போது அவரின் அன்பில் தினமும் வளர்வோம், மற்றும், பிறரன்பில் உண்மை மகிழ்வைப் பெறுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஞ்ஞாயிறு திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் திருவிழாவை  முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் கனவுகளை நனவாக்கும் பணியை இளையோர் ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திருஅவையின் திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் விழா திருப்பலியில், இறுதி தீர்ப்பு குறித்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, நம் உதவி தேவைப்படும் மக்களுக்கு நாம் ஆற்றியது அனைத்தும் இறைவனுக்கே ஆற்றியது என இயேசு எடுத்துரைத்ததை நினைவூட்டினார்.

நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தே நாம் தீர்ப்பிடப்படுவோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைகளையும் பகைமையையும் நாம் தேர்வு செய்யும்போது, நம்மால் ஒருநாளும் மகிழ்ச்சியாக செயல்படமுடியாது, மாறாக, கடவுளைத் தேர்வுசெய்யும்போது, அவரின் அன்பில் நாம் தினமும் வளர்வோம், மற்றும், பிறரன்பில் உண்மை மகிழ்வைப் பெறுவோம் எனக் கூறினார்.

நாம் எடுக்கும் நல்ல முடிவுகளின் பாதையில், அச்சம், பாதுகாப்பற்ற நிலை, விடையற்ற கேள்விகள் என்பவை, தடையாக இருக்கலாம், ஆனால், அன்பின் துணைகொண்டு அத்தடைகளை வெற்றிகொள்ளமுடியும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வாழ்வைத் தேர்வுசெய்வது என்பது, பயன்படுத்தி தூக்கியெறியும் கலாச்சாரத்தை கைவிட்டு, விண்ணுலகை நோக்கிய இலட்சியத்துடன், கடவுளின் கனவுகளை நனவாக்கும் பாதையில் நடைபோடுவது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வில் முடிவுகளை எடுக்கும் முன்னர், அன்பின் பாதையில் இயேசுவைப் பின்பற்றும் வல்லமையைத் தருமாறு, இறைவனை வேண்டுவோம் என்ற அழைப்பையும், திருத்தந்தை, தன் மறையுரையில் முன்வைத்தார்.

23 November 2020, 15:11