தேடுதல்

 Caltagironeல் பன்னாட்டு திருச்சிலுவை அருங்காட்சியகம் Caltagironeல் பன்னாட்டு திருச்சிலுவை அருங்காட்சியகம் 

அருங்காட்சியகத்திற்கு திருத்தந்தையின் மார்பணிச்சிலுவை

பன்னாட்டு திருச்சிலுவை அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் அனைவரும், வாழ்வாக, வழியாக மற்றும், உண்மையாக விளங்கும் கிறிஸ்துவிடம் அதிகமதிகமாக நெருங்கிச் செல்வார்களாக - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் சிசிலித் தீவிலுள்ள Caltagirone நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பன்னாட்டு திருச்சிலுவை அருங்காட்சியகத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது கழுத்தில் அணியும் சங்கிலியிலுள்ள சிலுவையை, அதாவது தனது மார்பணிச் சிலுவையை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி, திருச்சிலுவையின் மாட்சி விழாவன்று  திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு, தனது மார்பணிச் சிலுவையை அன்பளிப்பாக அனுப்பியுள்ளதோடு, மடல் ஒன்றையும் விசுவாசிகளுக்கு எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

கிறிஸ்துவே வழி, உண்மை, வாழ்வு

இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் திருப்பயணிகள் மற்றும், விசுவாசிகள் அனைவரும், வாழ்வும், வழியும், உண்மையுமான கிறிஸ்துவிடம் அதிகமதிகமாக நெருங்கிச் செல்வதற்கும், அவரை இறுகப் பற்றிக்கொள்வதற்கும், அது தூண்டுதலாக அமையும் என்ற தன் நம்பிக்கையை, திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

Caltagirone மறைமாவட்ட ஆயர் Calogero Peri அவர்களிடம் வழங்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இந்த அன்பளிப்பை, ஆயர் Peri அவர்கள், இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 06), திருப்பலி நிறைவேற்றியபின், இந்த அருங்காட்சியகத்தை நிறுவிய அருள்பணி Enzo Mangano அவர்களிடம் வழங்கினார்.

இவ்வாண்டு தவக்காலத்தில், கோவிட்-19 கொள்ளைநோய் மற்றும், அதன் எதிர்விளைவுகள் குறித்து அருள்பணி Mangano அவர்கள் தியானித்ததன் பயனாக, திருச்சிலுவை பற்றி மக்கள் ஆழமாக அறியவேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர், தன் நண்பர்கள் மற்றும், கலைஞர்களிடம், இயேசுவின் பாடுகளை மையப்படுத்தும் கலைவேலைப்பாடுகளையும், மற்ற நினைவுச்சின்னங்களையும் வழங்குமாறு விண்ணப்பித்தார். அதன் பயனாக, Caltagirone பன்னாட்டு திருச்சிலுவை அருங்காட்சியகம் உருவாகியுள்ளது.

இந்த அருங்காட்சியகத்திற்கு முதன்முதலில் சிலுவை ஒன்றை அளித்த ஆயர் Peri அவர்களுக்கு அது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆயர் அவர்கள் அளித்த, சிறிய புனித தமியானோ திருச்சிலுவை, அவர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அறையில் இருந்ததாகும். தான் நோயுற்ற காலத்தில் அந்த திருச்சிலுவையே, தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கும், செபங்களுக்கும் பதில் அளித்தது என்று ஆயர் Peri அவர்கள் கூறியுள்ளார். அந்த அருங்காட்சியகத்தில் தற்போது 150க்கும் அதிகமான இயேசுவின் பாடுகளை மையப்படுத்தும் கலைவேலைப்பாடுகள் உள்ளன.

07 November 2020, 14:44