தேடுதல்

புதுமை பதக்கம் என்ற புகழ்பெற்ற அன்னை மரியா திருவுருவத்தை வணங்கும் திருத்தந்தை புதுமை பதக்கம் என்ற புகழ்பெற்ற அன்னை மரியா திருவுருவத்தை வணங்கும் திருத்தந்தை 

புதுமை பதக்கம் திருவுருவத்தை திருத்தந்தை ஆசீர்வதித்தார்

புனித வின்சென்ட் தெ பவுல் அவர்கள் ஆரம்பித்த, பிறரன்பு புதல்வியர் சபையைச் சார்ந்த இளம் அருள்சகோதரி Catherine Labouré அவர்கள், 1830ம் ஆண்டு, பாரிசில் அன்னை மரியாவை மூன்று முறை காட்சியில் கண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அருளின் அன்னை மரியா பதக்கம் அல்லது, புதுமை பதக்கம் என்ற புகழ்பெற்ற அன்னை மரியா திருவுருவத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நவம்பர் 11, இப்புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் ஆசிர்வதித்தார்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், புனித Catherine Labouré என்பவருக்கு, அன்னை மரியா காட்சியளித்ததன் 190ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வின்சென்ட் தெ பவுல் சபை குழுமத்தின் தலைவர் அருள்பணி Tomaž Mavrič அவர்கள், தலைமையில், பிரதிநிதிகள் குழு ஒன்று, இந்த திருவுருவத்தை திருத்தந்தையிடம் கொண்டுவந்தது.

புனித வின்சென்ட் தெ பவுல் அவர்கள் ஆரம்பித்த, பிறரன்பு புதல்வியர் சபையைச் சார்ந்த இளம் அருள்சகோதரி Catherine Labouré அவர்கள், 1830ம் ஆண்டு, பாரிசில் அன்னை மரியாவை மூன்று முறை காட்சியில் கண்டார். அதே ஆண்டு நவம்பர் 27ம் தேதி அன்னை மரியா காட்சியில் தோன்றியது போன்று, அந்த புனிதர், அன்னை மரியா புதுமை பதக்கத்தை வடிவமைத்தார்.

அந்தக் காட்சியில், அன்னை மரியா, அந்தப் பதக்கத்தை அணிந்துகொள்பவர்களுக்கு மிகப்பெரும் வரங்களை அருள்வதாகவும் உறுதியளித்தார். மேலும், அந்த காட்சிகளில் அன்னை மரியா, பிரான்ஸ் மற்றும், உலகம் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றி எடுத்துரைத்து, தன்னிடம் நம்பிக்கையுடன் மன்றாடுகிறவர்களின் விண்ணப்பங்களை, தான் கேட்டருள்வதாகவும் உறுதியளித்தார்.

செபமாலை பக்திமுயற்சி

மேலும், கோவிட்-19 கொள்ளைநோய் உலகினின்று முழுவதும் ஒழியும்படியாக, கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி அவர்கள், கடந்த மார்ச் மாதம் 11ம் தேதியிலிருந்து, மே 30ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் பகல் 12 மணிக்கு செபித்துவந்த செபமாலை பக்திமுயற்சி, நவம்பர் 12, இவ்வியாழனன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல், சனிக்கிழமை வரை, பகல் 12 மணிக்கு கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி அவர்கள், அன்னை மரியாவை நோக்கி, செபிக்கும் செபமாலை பக்திமுயற்சி, நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

கர்தினால் கொமாஸ்த்ரி அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதம் 11ம் தேதியிலிருந்து, மே 30ம் தேதி வரை மேற்கொண்ட செபமாலை பக்தி முயற்சியில், இணையதளம் வழியாக, குறைந்தது 15 இலட்சம் பேர் பங்குகொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

12 November 2020, 15:00