தேடுதல்

நூலகத்திலிருந்து திருத்தந்தையின் மறைக்கல்வியுரை நூலகத்திலிருந்து திருத்தந்தையின் மறைக்கல்வியுரை  (ANSA)

மறைக்கல்வியுரை - இறைவேண்டலின் ஆசிரியர் இயேசு

செவிமடுத்தல், இறைவனைச் சந்தித்தல், விடாமுயற்சி, தனிமையும் அமைதியும், அனைத்தும் இறைவனைச் சார்ந்தே உள்ளன என்ற உள்ளுணர்வு ஆகியவைகளை உள்ளடக்கியது இறைவேண்டல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இத்தாலி நாட்டில், குளிர் காலம் துவங்கியதிலிருந்து, கொரோனா தொற்றுநோயும் வேகமாகப் பரவி வருவதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் நலன் கருதி, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் மக்களை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.  ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இப்புதனன்று, தன் நூலக அறையிலிருந்து விசுவாசிகளுக்கு தன் புதன் மறைக்கல்வியுரையை, இணையதளம் வழியாக, நேரடியாக வழங்கினார் திருத்தந்தை. கடந்த சில வாரங்களாக இறைவேண்டல் குறித்த ஒருதொடரை தன் புதன் மறைக்கல்வி உரைகளில் வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரம், இயேசுவின் வாழ்விலும், போதனைகளிலும், இறைவேண்டல் குறித்து நோக்குவோம் எனத் துவக்கியிருந்தார். இவ்வாரம், ‘இயேசு இறைவேண்டலின் ஆசிரியர் என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். முதலில், புனித மாற்கு நற்செய்தி முதல் பிரிவிலிருந்து ஒரு பகுதி (மாற்கு 1,32.34-38), பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. பின் திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். […] பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.(மாற்கு 1,32.34-38)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வி உரையில், இன்று, இயேசு எவ்வாறு செபித்தார் என்பது குறித்து சிந்திப்போம். நாம் எவ்வாறு செபிக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய கூறுகளை இயேசு செபித்த விதம் நமக்குக் கற்றுத் தருகின்றது. மக்கள் மீது அக்கறை கொண்டு செயல்படுத்திய தன் நடவடிக்கைகளின் போதும், இறைத்தந்தையுடன் கொள்ளவேண்டிய உரையாடலை அவர் மறந்துவிடவில்லை. இவ்வாறு அவர் கொண்டிருந்த உரையாடலே, அவர் செய்த செயல்களையும், போதனைகளையும் வழிநடத்திச் செல்வதாக இருந்தது. தனிமையில் அவர் செபித்ததன் வழியாக, இறைத்தந்தையுடன் தன் நெருங்கிய அன்புறவு நிலைக்கு உரமூட்டினார் இயேசு. இத்தகைய அன்புறவு நிலைக்காகத்தான் நாமும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். நம் ஆண்டவராம் இயேசுவின் எடுத்துக்காட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவெனில், இறைவேண்டல் என்பது, செவிமடுப்பதும், இறைவனைச் சந்திப்பதும் ஆகும். இதுவே, நம் ஒவ்வொரு நாளின் தலையாய விருப்பமாக இருக்கவேண்டும். இரண்டாவதாக, நம் இறைவேண்டல் விடாமுயற்சியுடையதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது, நம் வாழ்வின் விதியாக மாறி, இறையருளின் துணையுடன் நம்மைப் படிப்படியாக மாற்றியமைத்து,  நம்மைப் பலப்படுத்தி, எத்தகைய துன்பவேளைகளிலும் அவைகளைத் தாங்கி நிற்கும் சக்தியை வழங்குகிறது. மூன்றாவதாக, இறைவேண்டலுக்கு, தனிமையும் அமைதியும் இன்றியமையாதவை. இந்த அமைதியும் தனிமையும், நாம் இவ்வுலகிலிருந்து விலகிச் செல்வதற்கல்ல, அதற்கு நேர்மாறாக, மற்றவர்களின் தேவை குறித்து நம்மை மிகச் சிறந்த முறையில் திறப்பதற்கு உதவுவதற்கே. இறுதியாக, அனைத்தும் இறைவனைச் சார்ந்தே உள்ளன என்பதை நினைவுறுத்தி நிற்கின்றது இறைவேண்டல். இதுவே, நாம் இறைவனோடும், இறைவனின் படைப்புக்களோடும் கொண்டிருக்கும் உறவின் உண்மை அர்த்தத்தைப் புரிந்துகொள்வதை நோக்கி நம்மை இட்டுச்செல்கின்றது. ஆகவே, நாம், இறைவேண்டலின் ஆசிரியராம் இயேசுவிடம், எவ்வாறு செபிப்பது என்பதை கற்றுக் கொள்வோம். அவரே நமக்கு உண்மை மகிழ்வையும் அமைதியையும் வழங்கவல்லவர்.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன், நவம்பர் 4ம் தேதி புனித சார்லஸ் பொரோமியோ அவர்களின் திருவிழா சிறப்பிக்கப்படுவதை குறிப்பிட்டு, அவரைப்போல், நாமும் தாழ்ச்சியுடன், உண்மைக்கும் நன்மைத்தனத்திற்கும் நம்மை அர்ப்பணிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார். இறந்தவர்களை நினைத்து அவர்களுக்காக செபிக்கும் இந்நாட்களில், அண்மைய நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர், பிரான்சின் நீஸ் நகரிலும், ஆஸ்திரியாவின் வியன்னாவிலும் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தோர் ஆகியோரை நினைவுகூர்ந்து, அவர்களுக்காகச் செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை. பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

04 November 2020, 12:14