தேடுதல்

மூவேளை செப உரை 011120 மூவேளை செப உரை 011120 

கிறிஸ்தவ நம்பிக்கைக்கு சான்றுகளாக வாழ்ந்த புனிதர்கள் போல்

திருத்தந்தை : இயேசு உரைத்த பேறுகளின்படி, மகிழ்ச்சி, மற்றும், துயர்கள் மத்தியில், தங்கள் வாழ்வை நடத்திய புனிதர்கள் போல், நாமும் சான்று பகரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்றுகளாக வாழ்ந்த புனிதர்கள்போல் நாமும், இயேசுவின் மலைப்பொழிவு பேறுகளுக்கு விசுவாசமாக இருந்து, சான்று பகரவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர்கள் அனைவர் பெருவிழாவாகிய நவம்பர் 01, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை,  இயேசு உரைத்த பேறுகளின்படி, மகிழ்ச்சி, மற்றும், துயர்கள் மத்தியில், தங்கள் வாழ்வை நடத்திய புனிதர்கள் போல், நாமும், இவ்வுலக நோக்கங்களுக்கு எதிராக வாழ்வை நடத்தி சான்று பகரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

'துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்' என்ற வார்த்தைகளை எடுத்துரைத்து, தன் மூவேளை செப உரையைத் தொடர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயருறுவது என்பது, மகிழ்ச்சியின் அடையாளம் இல்லையெனினும், துயர்களால் தங்கள் இதயத்தைக் கடினமாக்கிக் கொள்ளாமல், இறைவனின் ஆறுதலில் நம்பிக்கைகொண்டு முன்செல்வோர், இவ்வுலகிலேயே இறை ஆறுதலைப் பெறுவர் என இயேசு உறுதி வழங்குவதாகக் கூறினார்.

'கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்' என்று உரைத்த இயேசு, பிறிதொரு இடத்தில் தன்னைப் பற்றி, 'என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்' என கூறியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த நினைக்காமல், அவர்களுக்கு செவிமடுத்து, மற்றவர்களின் தேவைகளுக்கு இடமளித்து அவர்களை மதிப்புடன் நடத்துபவர்கள், இறைவனால் வாக்களிக்கப்பட்ட பூமியாகிய மறு உலக வாழ்வைப் பெறுவர் என்றார்.

இயேசு தன் மலைப்போதனையின்போது வழங்கிய அனைத்து பேறுகளும், இவ்வுலகில் துவங்கி, மறு உலகில் நிறைவைக் காண்கின்றன என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இவ்வுலகின் நோக்கங்களுக்கு எதிராகச் செல்லும் இயேசுவின் பேறுகளை நாம் வாழ்வில் பின்பற்றி நம்  புனிதத்துவத்தை நோக்கிய பாதையில் நடைபோடுவோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, மோதல்கள், மற்றும், வன்முறைகள் பக்கம் சாயும் இன்றைய உலகில்,  கனிவுள்ளம் கொள்வது என்பது, அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றது, ஏனெனில், மற்றவர்களுக்கு செவிசாய்ப்பதும் அவர்களை மதித்துச் செயல்படுவதும் கனிவுள்ளம் என கூறினார்.

டுவிட்டர் செய்திகள்

மேலும், புனிதர்கள் அனைவர் பெருவிழா மற்றும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இஞ்ஞாயிறன்று, இரு செய்திகள் பதிவாகியிருந்தன. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2020, 12:30