தேடுதல்

 திக்ரே பகுதி மக்கள் திக்ரே பகுதி மக்கள் 

எத்தியோப்பியாவிற்காக அனைவரும் செபியுங்கள்

எத்தியோப்பியாவின் திக்ரே, மற்றும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் இடம்பெறும் வன்முறை குறித்தும், அப்பகுதியின் மனிதாபிமானச் சூழல் குறித்தும், திருத்தந்தை மிகுந்த கவலை கொண்டிருக்கின்றார் - திருப்பீட தகவல் மையம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

எத்தியோப்பியா நாட்டில், தீவிரமடைந்துவரும் போர், கடுமையான மனிதாபிமான நெருக்கடிச் சூழலை உருவாக்கியுள்ள இவ்வேளையில், போரிடும் தரப்புகள் வன்முறையைக் கைவிடவும், நாட்டு மக்களின் வாழ்வு பாதுகாக்கப்படவும், மக்கள், மீண்டும் அமைதியை அனுபவிக்கவும் வேண்டும் என்று, எல்லாரும் இறைவனை மன்றாடுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பம் விடுத்துள்ளார்.

நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று, அமைதி (#peace) என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை வெளியிட்ட தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், இவ்வாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், எத்தியோப்பியாவின் திக்ரே, மற்றும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் இடம்பெறும் வன்முறை குறித்தும், அப்பகுதியின் மனிதாபிமானச் சூழல் குறித்தும், திருத்தந்தை மிகுந்த கவலை கொண்டிருக்கின்றார் என்று, நவம்பர் 27, இவ்வெள்ளி மாலையில், திருப்பீட தகவல் மையத்தின் இயக்குனர், மத்தேயோ ப்ரூனி அவர்கள் அறிவித்தார்.

எத்தியோப்பியாவின் திக்ரே பகுதியில் இடம்பெறும் வன்முறை நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் அமைதி நிலவ அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார் என்று கூறிய, ப்ரூனி அவர்கள், திக்ரே பகுதியில், போரில் ஈடுபட்டுள்ள குழுக்கள், வன்முறையைக் கைவிட்டு, அமைதியைக் கொணரும் நடவடிக்கைகளில் இறங்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என்றும் கூறினார்.

திக்ரே பகுதியில் இடம்பெறும் வன்முறையில், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், பல்லாயிரக்கணக்கான மக்கள், சூடான் நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் கூறியுள்ள ப்ரூனி அவர்கள், எத்தியோப்பியாவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை குறித்து, நவம்பர் 8ம் தேதி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், திருத்தந்தை குறிப்பிட்டதோடு, அந்நாட்டிற்காகச் செபிக்க அழைப்பு விடுத்தார் என்றும் கூறினார்.

இதற்கிடையே, AU எனப்படும் ஆப்ரிக்க ஒன்றியமும், எத்தியோப்பியாவில் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, அக்கண்டத்தின் மூன்று முன்னாள் தலைவர்கள், அந்த ஒன்றியத்தின் சார்பாக, இவ்வெள்ளியன்று எத்தியோப்பியா சென்றுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் வடபகுதியை தன் கட்டுக்குள் வைத்திருக்கும், திக்ரே மக்கள் விடுதலை அமைப்பு (TPLF), சரணடைய மறுத்துவருகின்றது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2020, 14:32