தேடுதல்

மூவேளை செப உரைக்குப்பின் மக்களை வாழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரைக்குப்பின் மக்களை வாழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நம் கருணை நடவடிக்கைகளால் தீர்ப்பிடப்படுவோம்

திருத்தந்தை : தன் ஆடுகளோடு தன்னை அடையாளம் கண்டுகொண்ட இயேசுவைப்போல், நாமும், அவரையொத்த ஒரு மேய்ப்பனாக செயல்பட்டோமா என்ற கேள்வியை நாம் நமக்குள் கேட்கவேண்டிய நேரமிது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் ஒவ்வொருவரும் நம் அன்பு செயல்களாலும், நம் கருணை நடவடிக்கைகளாலும் தீர்ப்பிடப்படுவோம் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலக இறுதி நாளில் நம்மைத் தீர்ப்பிடவரும் ஆண்டவர், நாம் அவரைப்போல் ஓர் ஆயனாக செயல்பட்டோமா என்ற கேள்வியையும் கேட்பார் என்றார் திருத்தந்தை.

மற்றவர்களுக்கு நெருக்கமாக இருந்து அவர்களுக்கு உதவுவதைப் பொருத்தே நாம் தீர்ப்பிடப்படுவோம் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள், நோயுற்றோர், மற்றும், துன்புறுவோர் குறித்து நம் அணுகுமுறை எத்தகையதாக இருந்தது என்பதே இன்றைய கேள்வி எனவும் கூறினார்.

கோவிட்-19 கட்டுப்பாடுகளை பின்பற்றி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு, கருணையின் செயல்பாடுகள் குறித்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நோயுற்றோரிலும், ஏழைகள் மற்றும் துயருறுவோரிலும், சிறையில் வாடுவோரிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவை நாம் அடையாளம் கண்டுள்ளோமா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

தன் ஆடுகளோடு தன்னை அடையாளம் கண்டுகொண்ட இயேசுவைப்போல், நாமும் அவரையொத்த ஒரு மேய்ப்பனாக செயல்பட்டோமா என்ற கேள்வியை நாம் நமக்குள் கேட்கவேண்டிய நேரமிது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் காயங்களை, தனிமையை, இயலாமையை, துன்புறும் பிறரில் நாம் கண்டபோது நம்மில் இரக்கம் பிறந்துள்ளதா, அல்லது, பார்த்தும் பாராமுகமாக நாம் சென்றுள்ளோமா என்பது குறித்து சிந்திக்கும் வேளையில், நல்ல சமாரியர் உவமையை மனதிற்குள் கொணர்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நல்ல சமாரியர் உவமையில், உதவித் தேவைப்படுவோரில் குடியிருக்கும் இயேசுவைக் கண்டுகொள்ளாமல் சென்ற இருவரைப்போல் நாமும் பாராமுகமாகச் சென்றுள்ளோமா என்ற கேள்வி, நம்மிடம் இறுதி தீர்ப்பின்போது கேட்கப்படும் என, மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்தாலியின் தெற்கிலுள்ள பசிலிக்காத்தா மற்றும் கம்பானியா பகுதிகளில், 1980ம் ஆண்டு, ஏறக்குறைய 2500 பேரின் உயிர்களை பலிவாங்கிய நிலநடுக்கத்தின் 40ம் ஆண்டு, இத்திங்கள், நவம்பர் 23ம் தேதி நினைவுகூரப்படுவதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2020, 12:40