தேடுதல்

ஹைதராபாத் பேராயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அந்தோனி பூலா ஹைதராபாத் பேராயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அந்தோனி பூலா  

ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர்

கர்நூல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும் ஆயர் அந்தோனி பூலா அவர்களை, ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் கர்நூல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும் ஆயர் அந்தோனி பூலா அவர்களை, ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 19, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

2011ம் ஆண்டு முதல் ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பணியாற்றிவந்த பேராயர் தும்மா பாலா அவர்கள் பணிஓய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அப்பொறுப்பில், ஆயர் பூலா அவர்களை நியமித்துள்ளார்.

1944ம் ஆண்டு பிறந்த பேராயர் பாலா அவர்கள், 1987ம் ஆண்டு, வாரங்கல் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டு, பின்னர், 2011ம் ஆண்டு, ஹைதராபாத் பேராயராக நியமிக்கப்பட்டார்.

1961ம் ஆண்டு பிறந்த ஆயர் பூலா அவர்கள், 1992ம் ஆண்டு தன் 31வது வயதில் கடப்பா மறைமாவட்டத்தில் அருள்பணியாளராக தன் பணிகளைத் துவக்கி, பின்னர், 2008ம் ஆண்டு தன் 47வது வயதில் கர்நூல் மறைமாவட்டத்தின் ஆயராக அருள்பொழிவு பெற்றார்.

மேலும், சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்களை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் உறுப்பினராக, நவம்பர் 17, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

2005ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் பேராயராக நியமனம் பெற்ற ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், கினி, லிபேரியா, காம்பியா, சியேரா லெயோன் ஆகிய நாடுகளில் திருப்பீட தூதராகப் பணியாற்றியவர்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், 2012ம் ஆண்டு, சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் நியமிக்கப்பட்டார் என்பதும், இவர், தற்போது, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் துணைத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

19 November 2020, 14:39