தேடுதல்

சிறந்த அரசியல் அமைப்பு சிறந்த அரசியல் அமைப்பு 

வாரம் ஓர் அலசல்: சிறந்ததோர் அரசியல் அமைக்கப்பட...

"சிறந்ததோர் அரசியல்” என்பது, பிறரன்பின் மிக மதிப்புமிக்க வடிவங்களில் ஒன்றாகும். அது, பொது நலனுக்குப் பணியாற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்திருப்பதாகும் . அனைத்து குடிமக்களும் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு வாய்ப்புக்களை உறுதிசெய்வதும் ஆகும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு காலத்தில் அழகான தீவு ஒன்றில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். மிக எளிமையாக வாழ்ந்துவந்த அவரின் ஒரே சொத்து, ஒரு சிறிய மூட்டையே. அவர், ஓர் ஊருக்குப் போவார். அங்கு ஒரு பத்து பதினைந்து நாள்கள் தங்குவார். பின்னர் அடுத்த ஊருக்குப் போவார். இவ்வாறு அவர் எந்த ஓர் ஊரிலும் நிரந்தரமாகத் தங்காத நாடோடித் துறவி. அவரிடம் யாராவது வந்து தங்களது பிரச்சனைகளைச் சொல்லி அழுதால், அவற்றிற்குத் தீர்வுகள் கொடுப்பதில் இவர் சிறந்தவர். பெருந்துன்பங்களோடு தன்னிடம் யாராவது வந்தால், அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வது தவிர, தனது மூட்டைக்குள் இருந்து, சிலருக்கு நூல்கள், சிலருக்குப் பழங்கள் போன்றவற்றைக் கொடுப்பார். சிலருக்கு பொன் வெள்ளி போன்றவைகூட கிடைத்துள்ளன. அந்த துறவி பற்றி அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் எல்லாருமே நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஒரு சமயம் அந்த துறவி, கிராமம் ஒன்றிற்குச் சென்று, அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார். அவர் அந்த கிராமத்திற்கு வந்திருந்ததை அறிந்த கிராம மக்கள், அவரிடம் சென்று தங்கள் கஷ்டங்களைச் சொல்லி ஆலோசனை பெற்று வந்தனர். அந்த கிராமத்தில் வியாபாரி ஒருவர், தனது தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை அனுபவித்து, அதிக கஷ்டங்களோடு வாழ்ந்து வந்தார். அந்த வியாபாரியும் அந்த துறவியிடம் சென்று, தனது கஷ்டங்களை எல்லாம் சொல்லி, கதறிக் கதறி அழுதார். அவர் சொன்னதைக் கேட்ட துறவி, சிறிதுநேரம் சிந்தித்தார். பின்னர் தனது மூட்டையிலிருந்த ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்து அவரிடம் கொடுத்தார். இதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல். நீ செல்லும் வழியில் இதைத் திறக்கவே கூடாது. உனது வீட்டிற்குப்போய் சேர்ந்தவுடன் அதைத் திறந்து பார். ஏனென்றால், இந்தப் பெட்டிக்குள் ஒரு புதையல் இருக்கிறது. இந்த புதையல் உனக்கு நான்கு வாழ்க்கை இரகசியங்களைச் சொல்லும். அந்த நான்கு இரகசியங்களையும் நீ அறிந்துகொண்டால், அடுத்து நீ தொழில் ஆரம்பிக்கலாம், அந்த தொழிலில் நீ பெரிய ஆளாக வரலாம் என்று துறவி சொன்னார். அந்த வியாபாரியும் ஆசை ஆசையாய் அந்த மரப்பெட்டியை எடுத்துக்கொண்டுபோய் வீட்டு பூஜை அறையில் வைத்து திறந்து பார்த்தார். அந்த சிறிய பெட்டியில், ஒரு மணி, ஓர் ஒற்றை ரூபாய் நாணயம், ஒரு சிப்பி, ஒரு முத்து ஆகிய நான்கு பொருள்கள் இருந்தன. அந்த வியாபாரி, இந்த நான்கு பொருள்களும் சொல்லும் இரகசியங்களை, அன்று இரவு முழுவதும் சிந்தித்துப் பார்த்தார். எதுவுமே புலப்படவில்லை. எனவே அதை அப்படியே மூடிவைத்துவிட்டு படுக்கைக்குச் சென்றார்.

அந்த வியாபாரி, அடுத்த நாள் காலையில், முதல் வேலையாக அந்த மரப்பெட்டியை எடுத்துக்கொண்டுபோய் துறவியின் முன்னால் திறந்து வைத்தார். பின்னர், துறவியிடம், அந்த நான்கு பொருள்களும் உணர்த்தும் இரகசியங்கள் என்ன என்று, இரவு முழுவதும் சிந்தித்துப் பார்த்தேன். எதுவுமே தெரியவில்லை. அந்த இரகசியங்கள் என்ன என்று தயவுகூர்ந்து சொல்லுங்கள் என்று வியாபாரி கேட்டார். அப்போது துறவியார், நானும் பல ஊர்களுக்குச் சென்றுள்ளேன். உன்னைப்போல் தாங்கமுடியாத கஷ்டங்களைச் சொல்லி அழுந்த பலரிடம் இந்த மரப்பெட்டியைக் கொடுத்துள்ளேன். அந்தப் பெட்டியில், தங்கம் வெள்ளி போன்றவை இருக்கும் என்று நினைத்து அவர்கள் ஆவலோடு அதை எடுத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே அதில் இல்லாததால் அவர்கள் திரும்பி வரவே இல்லை. நீ மட்டும்தான் திரும்பி வந்து, அந்த இரகசியங்களைக் கேட்கிறாய், அதனால் உனக்கு அவற்றைச்  சொல்கிறேன், கேள் என்று துறவி சொன்னார். இதிலுள்ள மணி நேரத்தையும், ஒற்றை ரூபாய் நாணயம் பணத்தையும், சிப்பியும் முத்தும் சேர்ந்து சொற்களையும் குறிக்கின்றன. யார் ஒருவர் தனது நேரத்தைச் சரியாக கையாள்கிறாரோ, அவர் ஒருவரே தனது வாழ்க்கையையும் சரியாகக் கையாள்கிறார். யார் ஒருவர் தனது செல்வத்தைக் கணக்கிட்டுச் செலவு செய்கிறாரோ அவரிடமிருந்து அந்த செல்வம் நீங்காது. யார் ஒருவர், தனது சொல்லை, சரியான இடத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்துகிறாரோ அவர் மட்டுமே தனக்குக் கிடைக்கும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்கிறார். இவைதான் இந்தப் பொருள்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் என்று துறவி சொன்னார். அப்படியா, நீங்கள் நான்கு இரகசியங்கள் என்று சொன்னீர்களே, மூன்றுதானே சொல்லியிருக்கிறீர்கள், நான்காவது என்ன என்று கேட்டார் வியாபாரி. அதற்கு துறவி இந்த மூன்றையும் வாழ்க்கையில் செயல்படுத்தினால் மட்டுமே, வெற்றி நிச்சயம். இதுதான் நான்காவது இரகசியம் என்று சொல்லிவிட்டு, அந்த கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்குப் புறப்பட்டார் அந்த துறவி. நேரத்தை, பணத்தை, பேசும் வார்த்தைகளை எவ்வாறு கையாள்கிறோம்? நமக்குக் கிடைக்கின்ற ஒவ்வோர் அறிவுரையையும், வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுத்துகிறோம்? என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம். பண்படாத மனதில், எந்த ஓர் அறிவுரை சொன்னாலும், அந்த அறிவுரையால் பயன் எதுவும் கிடையாது. (Motivational stories-sabri)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர்(Fratelli Tutti)” என்ற தனது புதிய திருமடலின் ஐந்தாவது பிரிவில், “சிறந்ததோர் அரசியலை”, “மதிப்புமிக்க அரசியலை” எவ்வாறு அமைப்பது என்பது பற்றி, அருமையான சிந்தனைகளை வழங்கியுள்ளதோடு, அரசியலில் பணியாற்றும் அனைவருக்கும் தன் விண்ணப்பங்களையும் அதில் விடுத்துள்ளார். “சிறந்ததோர் அரசியல்” என்பது, பிறரன்பின் மிக மதிப்புமிக்க வடிவங்களில் ஒன்றாகும். அது, பொது நலனுக்குப் பணியாற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்திருப்பதாகும் (எண்180) மற்றும், மக்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, கலந்துரையாடலுக்குத் திறந்த மனம் கொண்டிருப்பதாகும் (எண் 160). தனது சொந்த பணிகளுக்காக மக்களைப் பயன்படுத்துவது மற்றும், தனது சொந்தப் புகழை அதிகரிப்பதற்காக, தன்னல நோக்கத்தோடு செயல்படுவது ஆகியவற்றைப் புறக்கணிப்பதாகும். “சிறந்ததோர் அரசியல்” என்பது, சமுதாய வாழ்வின் முக்கிய கூறாகிய வேலையைப் பாதுகாப்பது மற்றும், அனைத்து குடிமக்களும் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு வாய்ப்புக்களை உறுதிசெய்வதும் ஆகும் (எண் 162).  “சிறந்ததோர் அரசியல்” என்பது, வறியோருக்கு பணத்தால் அல்ல, வேலை வாய்ப்பு வழியாக, அவர்கள் மாண்புள்ள வாழ்வைக் கொண்டிருப்பதற்கு உதவுவதாகும். ஏழ்மைக்கு எதிரான உண்மையான யுக்தி என்னவென்றால், ஏழைகளுக்கு ஒருமைப்பாட்டு உணர்வும், உதவிகளும் கிடைப்பதற்கு வழியமைப்பதாகும். சிறந்ததோர் அரசியலின் பணி என்னவென்றால், சமுதாயத்தில் தனிமைப்படுத்தல், மனித உறுப்புக்கள், திசுக்கள், ஆயுதங்கள், போதைப்பொருள்கள் ஆகியவற்றை வர்த்தகம் செய்தல், பாலியல் வன்கொடுமை, அடிமைத்தொழில்முறை, பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றக்கும்பல் போன்ற அடிப்படை உரிமைகளைத் தாக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதாகும். இவ்வாறு தனது திருமடலில் கூறியுள்ள திருத்தந்தை, மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கு வெட்கத்தைத் தரும் செயலாக உள்ளது மற்றும், உணவு, மனிதரின் தவிர்க்க முடியாத உரிமையாக இருப்பதால், பசி, ஒரு குற்றச் செயலாகும் என்று சொல்லி, இவையிரண்டும் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஊழலைப் புறக்கணிக்கும், மனித மாண்பை மையப்படுத்தும், அரசியல் நமக்குத் தேவைப்படுகின்றது. பொருள்கள் விற்பனைசெய்யப்படும் சந்தை, எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னிலே தீர்வு காண இயலாது. இதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் சீர்திருத்தம் தேவை என்பதும் திருத்தந்தையின் திருமடலில் கூறப்பட்டுள்ளது.

நமக்குக் கிடைக்கின்ற ஒவ்வோர் அறிவுரையும் நம் செவிகளுக்கு எட்டுகின்றதா, குறிப்பாக அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு எட்டுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆப்ரிக்காவின் நைஜர் நாட்டில் 2018ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஜிகாதி முஸ்லிம் தீவிரவாத அமைப்பால் கடத்தப்பட்ட, ஆப்ரிக்க மறைப்பணி சபையின் அருள்பணியாளர் Pierluigi Macalli அவர்களும், அவரோடு கடத்தப்பட்டிருந்த மற்ற மூவரும் இம்மாதம் 8ம் தேதி மாலி நாட்டில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மறைபரப்புப்பணி நாளான அக்டோபர் 18 இஞ்ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், மூவேளை செப உரையாற்றியபின், இவர்கள் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று, கடவுளுக்கு நன்றி கூறினார். மேலும், உலகின் பல பகுதிகளில் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு இருக்கும் அனைவருக்காகவும், மறைப்பணியாளர்கள் மற்றும், வேதியர்களுக்காகவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்நேரத்தில், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நோயாளியும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக உழைத்துவந்தவருமான, 83 வயது நிரம்பிய, இயேசு சபை அருள்பணி ஸ்டான் லூர்து சுவாமி அவர்களும், விரைவில் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்று செபிப்போம். அவரின் விடுதலைக்காக இந்தியா எங்கும் எழுப்பப்படும் குரல்கள், நடுவண் அரசின் செவியைத் திறக்கட்டும் என கடவுளை மன்றாடுவோம்.  கொரோனா தொற்றுக்கிருமியின் பரவல் குறைந்ததுபோல் உணரப்பட்டவேளை, அது மீண்டும் பரவத்தொடங்கி மக்களிலே அச்சத்தை உருவாக்கி வருகிறது. அதற்கு தடுப்பு ஊசிகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வேளையில், Monika Wisniewska என்ற போலந்து எழுத்தாளர் வெளியிட்டுள்ள ஒரு கூற்று காலத்திற்கேற்றதாக உள்ளது. கோவிட்-19 தடுப்பூசி முதலில் அரசியல்வாதிகளிடம் பரிசோதிக்கப்படவேண்டும். அதில் அவர்கள் உயிர் பிழைத்தால் ஊசி மருந்து பாதுகாப்பானதாகும். அவர்கள் காப்பாற்றப்படவில்லையெனில், நாடு பாதுகாப்பாக இருக்கும். திருத்தந்தை விண்ணப்பித்திருப்பதுபோல, நாடுகளில் சிறந்ததோர் அரசியல் உருவாகச் செபிப்போம். நல்ல அறிவுரைகள் எங்கிருந்து, யார் வழியாக வந்தாலும், அவற்றை வாழ்வாக்க முயற்சிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2020, 14:32