தேடுதல்

விடுவிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Pierluigi Maccalli - கோப்புப் படம் விடுவிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Pierluigi Maccalli - கோப்புப் படம் 

நற்செய்தியை விதைப்போர், உடன்பிறந்த நிலையின் நெசவாளர்கள்

லிபியாவின் வருங்காலத்திற்கென இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள், முரண்பாடுகளை முடிவுக்குக் கொணர்ந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்ட சிறிது நேரம் செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவையின் மறைப்பரப்புப்பணி ஞாயிறு கொண்டாடப்படும் இவ்வேளையில், Niger நாட்டில் இரண்டு ஆண்டுகளாக கடத்திவைக்கப்பட்டிருந்த அருள்பணியாளர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளது மகிழ்சசி தருவதாக உள்ளது என அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இதனைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு ஆண்டுகளாக கடத்திவைக்கப்பட்டிருந்த அருள்பணியாளர் Pierluigi Maccalli அவர்களும், மேலும் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து இறைவனுக்கு நன்றியுரைப்பதாக தெரிவித்தார்.

'திருமுழுக்கு அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டோர், உடன்பிறந்த நிலையின் நெசவாளர்கள்' என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு நாள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, நற்செய்தியை விதைக்கும் அருள்பணியாளர்கள், துறவறத்தார், மற்றும், பொதுநிலையினர் அனைவரும் இவ்வுலகில் உடன்பிறந்த நிலையின் நெசவாளர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

லிபியாவில் அமைதிக்கு

லிபியா நாட்டின் மோதலை முடிவுக்குக் கொணர்ந்து, நாட்டில் நல்லதொரு வருங்காலத்தை உருவாக்க, அனைத்துலக அளவில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் தன்  மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தனத்தை பிரான்சிஸ்.

லிபியாவின் கடல் பகுதியில் மீன்பிடித்ததாக செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு இன்னும் லிபியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இத்தாலிய, மற்றும், துனிசிய மீனவர்கள் குறித்தும் தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிபியாவின் அமைதி குறித்து இடம்பெற்றுவரும் பேசசுவார்த்தைகள் வெற்றியடைய செபிப்பதாகவும் தெரிவித்தார்.

லிபியாவின் வருங்காலத்திற்கென இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள், முரண்பாடுகளை முடிவுக்குக் கொணர்ந்து, நாட்டில் அமைதியையும் நிலையானத் தன்மையையும் நோக்கி அழைத்துசெல்லும் என்ற நம்பிக்கையுடன் சிறிது நேரம் அமைதியில் செபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2020, 12:45