தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

கடவுள், இல்லங்களில், தெருக்களில், வளாகங்களில் வாழ்கிறார்

அக்டோபர் 31, இச்சனிக்கிழமையன்று, “நம் குழுமங்கள் மற்றும், நகரங்களின் முக்கியத்துவத்தை உணரவேண்டும்” என்ற தலைப்பில், பெருநகரங்கள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 31, இச்சனிக்கிழமையன்று பெருநகரங்கள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, உலகின் நகரங்களை நாம் எவ்வாறு நோக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, 'பெருநகரங்கள் உலக நாள்' (#WorldCitiesDay) என்ற 'ஹாஷ்டாக்'குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“இல்லங்களில், தெருக்களில் மற்றும், வளாகங்களில் கடவுள் வாழ்கின்றார் என்ற நம்பிக்கை நிறைந்த பார்வையோடு, நகரங்களை நாம் நோக்கவேண்டும். இவற்றில் கடவுளின் இருப்பை நாம் காணவேண்டும், மற்றும், மீண்டும் கண்டுணரவேண்டும், கடவுள் உண்மையான உள்ளத்தோடு தம்மைத் தேடுகிறவர்களிடமிருந்து, அவர் ஒருபோதும் தம்மை மறைக்கமாட்டார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அக்டோபர் 31, இச்சனிக்கிழமையன்று, “நம் குழுமங்கள் மற்றும், நகரங்களின் முக்கியத்துவத்தை உணரவேண்டும்” என்ற தலைப்பில், பெருநகரங்கள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டது.

நிதி ஊழல்களைத் தவிர்ப்பதற்கு

மேலும், வத்திக்கான் நாட்டுக்குள் இடம்பெறும் நிதி சார்ந்த ஊழல்களைத் தவிர்ப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

வத்திக்கான் மற்றும், திருப்பீடத்தில் இடம்பெறும் மாற்றங்கள் குறித்து, AdnKronos செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், மேலும் பல மாற்றங்கள் வெகு விரைவில் இடம்பெறும் என்றும் கூறினார்.

வத்திக்கானில், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் குறிப்பிட்ட யுக்திகள் எதுவும் கையாளப்படவில்லை, அதேநேரம், இதில் சிறிய, மற்றும், தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

AdnKronos செய்தி நிறுவனத்திற்கு, திருத்தந்தை வழங்கிய இந்த பேட்டி, அக்டோபர் 30, இவ்வெள்ளியன்று வெளியானது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2020, 13:28