தேடுதல்

புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள கிகாலி பேராயர் Antoine Kambanda புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள கிகாலி பேராயர் Antoine Kambanda   (@JP Bodjoko, SJ/Vaticannews)

புதிய கர்தினால்களுக்கு வியப்பு, நன்றியுணர்வு

கர்தினாலாக தான் அறிவிக்கப்பட்டிருப்பது, வன்முறைத் தாக்குதல்களால் கடுமையாய்ச் சிதைக்கப்பட்டுள்ள மற்ற சமுதாயங்களுடன் சான்று வாழ்வைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு சவால் – ருவாண்டா புதிய கர்தினால்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“அனைவரும் உடன்பிறந்தோர்” (FratelliTutti) என்ற தனது புதிய திருமடலை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 27, இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நாம் ஆற்றும் அன்புச் செயல்கள், நம் உலகத்திற்கு எவ்வளவு இன்றியமையாதவை என்பது பற்றி விளக்கியுள்ளார்.

“அன்புகூர்பவர்கள் அனைவரும், தாங்கள் ஆற்றும் அனைத்து அன்புச்செயல்களும்,  அடுத்திருப்பவர் மீது உண்மையான அக்கறையுடன் ஆற்றும் செயல்களும், கடவுளுக்காக ஆற்றும் எந்த ஒரு சிறு அன்புச் செயலும், தாராள மனதுடன் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும், உறுதியுடன் தாங்கிக்கொள்ளும் எந்த வேதனையும், பயனின்றி போகாது என்பதில் அவர்கள், உறுதியாய் இருக்கலாம். இந்தச் செயல்கள் அனைத்தும், உயிர்த்துடிப்புடைய ஒரு சக்தி போல், நமது உலகத்தைப் போர்த்தியிருக்கின்றன” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாயன்று பதிவாகியிருந்தன.

புதிய கர்தினால்களுக்கு வியப்பு, நன்றியுணர்வு

மேலும், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், அக்டோபர் 25, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் பெயர்களை அறிவித்தபோது, அது தங்களுக்கு வியப்பையும், நன்றியுணர்வையும் ஏற்படுத்தின என்று, புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ள 13 பேரும் கூறியுள்ளனர். 

ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டு கிகாலி பேராயர் Antoine Kambanda அவர்கள் கூறுகையில், தான் கர்தினாலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்த தொலைப்பேசி அழைப்பு வந்தபோது தான் அதை முதலில் நம்பவில்லை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், தன் பெயரை வாசிக்க கேட்டபோதுதான், உண்மையிலேயே தன்னால் நம்ப முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

ருவாண்டா நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றதற்கு 26 ஆண்டுகளுக்குப்பின், அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக கர்தினால் ஒருவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்றும், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் Kambanda அவர்கள் வத்திக்கான் செய்தித் துறையிடம் கூறியுள்ளார்.

கர்தினாலாக தான் அறிவிக்கப்பட்டிருப்பது, தனது நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் வன்முறைத் தாக்குதல்களால் கடுமையாய்ச் சிதைக்கப்பட்டுள்ள மற்ற சமுதாயங்களுடன் சான்று வாழ்வைப் பகிர்ந்துகொள்வதற்கும் சவாலாகவும், பெரிய பொறுப்புணர்வைத் தூண்டுவதாகவும் உள்ளது என்று, பேராயர் Kambanda அவர்கள் கூறியுள்ளார்.

ருவாண்டாவில், 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதிக்கும், ஜூலை மாதம் 15ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அந்நாட்டு Tutsi மற்றும், Hutu இனங்களுக்கு இடையே இடம்பெற்ற படுகொலைகளில், 5 இலட்சம் பேர் முதல், பத்து இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.

27 October 2020, 15:12