தேடுதல்

தென் கொரியாவில் ஐ.நா. நாள் தென் கொரியாவில் ஐ.நா. நாள் 

திருத்தந்தை - போர்கள் தவிர்க்கப்படவேண்டும்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலைமப்பு அறிக்கையில், பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டு, அதை அங்கீகரித்ததன் பயனாக, அந்நிறுவனம், 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி, அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நாளை மையப்படுத்தி, ஐ.நா. நாள் (#UNDay) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்கள் தவிர்க்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“அனைவருக்கும், உண்மையான ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை நாம் விரும்பினால், போர் தவிர்க்கப்படவேண்டும். சட்டத்தின் விதிமுறைகளும், சோர்வின்றி இடம்பெறும் கலந்துரையாடல் மற்றும், இடைநிலை வகிப்பவரின் தீர்மானங்களும் உறுதிசெய்யப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலமைப்பு, ஒளிவுமறைவற்ற மற்றும், நேர்மையான வழிமுறைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. இது நீதி மற்றும், அமைதியைக் குறித்து நிற்கின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலைமப்பு அறிக்கையில், பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டு, அதை அங்கீகரித்ததன் பயனாக, அந்நிறுவனம், 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி, அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது.

1947ம் ஆண்டு, ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, அக்டோபர் 24ம் தேதியை, அந்நிறுவனத்தின் அரசியலைமப்பு நாளாக அறிவித்தது. மேலும்,  ஐ.நா. பொது அவை 1971ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நாள், உலகளாவிய நாளாகவும்,  அந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், அந்நாளை, அரசு விடுமுறை நாளாகவும் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

2020ம் ஆண்டில் இந்நிறுவனம், தனது 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பித்து வருகிறது. வருகிற நவம்பர் 21ம் தேதி, அந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், உயர்மட்ட அளவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2020, 14:44