தேடுதல்

திருத்தந்தை, இஸ்பெயின் பிரதமர் Pérez-Castejón சந்திப்பு திருத்தந்தை, இஸ்பெயின் பிரதமர் Pérez-Castejón சந்திப்பு  (ANSA)

திருத்தந்தை, இஸ்பெயின் பிரதமர் Pérez-Castejón சந்திப்பு

“அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற புதிய திருமடல் மற்றும், திருத்தந்தை, சமுதாய இயக்கங்களுக்கு எழுதியுள்ள மடலிலிருந்து சில தலைப்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி, திருப்பீடமும், உலகிலுள்ள சமுதாய இயக்கங்களும், மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தின

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இஸ்பெயின் நாட்டின் பிரதமர் Pedro Sànchez Pérez-Castejón அவர்கள்,  அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார், இஸ்பெயின் பிரதமர் Pérez-Castejón.

திருப்பீடத்திற்கும், இஸ்பெயின் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், தலத்திருஅவைக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவேண்டியதன் அவசியம் போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்தது.

இன்னும், உலக அளவில் நலவாழ்வில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள், புலம்பெயர்ந்தோர் உட்பட, தற்போதைய சில உலகளாவிய விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம், மேலும் அறிவித்தது.

சமுதாய இயக்கங்களின் மெய்நிகர் கூட்டம்

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற புதிய திருமடல், மற்றும், திருத்தந்தை, சமுதாய இயக்கங்களுக்கு எழுதியுள்ள மடலிலிருந்து  சில தலைப்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி, திருப்பீடமும், உலகிலுள்ள சமுதாய இயக்கங்களும், அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று, மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தின.

கொரோனா கொள்ளைநோய் பரவல் முடிந்த பின்னர், நிலம், குடியிருப்பு, வேலை ஆகியவற்றின் நிலவரம்; சமுதாய இயக்கங்களின் கண்ணோட்டத்தில் அனைவரும் உடன்பிறந்தோர் திருமடல்; வருகிற நவம்பரில் பொருளாதாரத்தின் நிலைமை, ஆகிய மூன்று தலைப்புகள், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றன.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், அந்த அவையின் புலம்பெயர்ந்தோர் பிரிவின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி, சமுதாய இயக்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

24 October 2020, 14:35