தேடுதல்

நீஸ் நகரின் பெருங்கோவில் தாக்குதல் நீஸ் நகரின் பெருங்கோவில் தாக்குதல்  

நீஸ் நகரின் பெருங்கோவில் தாக்குதலுக்கு திருத்தந்தை கண்டனம்

திகிலூட்டும் வன்முறைச் செயல்கள், எவ்வளவு கடும் சொற்களால் கண்டிக்கப்படவேண்டுமோ அந்த அளவுக்கு அவற்றுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டும் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில், கத்தோலிக்க பெருங்கோவில் ஒன்று கொடூரமாய்த் தாக்கப்பட்டதில், இறந்தோர் மற்றும், காயமடைந்தோர் ஆகியோருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபிக்கின்றார் மற்றும், அதனால் துன்புறும் கத்தோலிக்க சமுதாயத்துடன் ஒருமைப்பாடுணர்வு கொண்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 29, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணியளவில், நீஸ் நகரில் அமைந்துள்ள நோத்ரு தாம் அன்னை மரியா பெருங்கோவிலில், 25 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் நுழைந்து, அங்கு இருந்தவர்களைக் கத்தியால் குத்தியதில் மூவர் உயரிழந்துள்ளனர் மற்றும், பலர் காயமடைந்துள்ளனர். அந்த இளைஞர், இந்த தாக்குதலை நடத்தியபோது, "Allah Akbar" என்று கத்திக்கொண்டு மேற்கொண்டதாக, செய்திகள் கூறுகின்றன.

நீஸ் மறைமாவட்ட ஆயர் André Marceau அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுதாபத் தந்திச் செய்தியை அனுப்பியுள்ள, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து திருத்தந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்க சமுதாயத்துடன் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, அவர்களுக்காகச் செபிக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய திகிலூட்டும் வன்முறைச் செயல்கள், எவ்வளவு கடும் சொற்களால் கண்டிக்கப்படவேண்டுமோ அந்த அளவுக்கு அவற்றுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை கூறியதாக, கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பீட தகவல் தொடர்பகம்

மேலும், இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், பயங்கரவாதமும், வன்முறையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், ஆண்டவரின் இல்லம் போன்ற, அன்பும் ஆறுதலும் நிறைந்த ஓர் இடத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது வேதனையளிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

இன்னும், பிரான்ஸ் நாட்டு ஆயர்களும், குறிப்பாக, நீஸ் மறைமாவட்ட ஆயர் André Marceau அவர்களும், இந்த தாக்குதலுக்கு எதிரான தங்களின் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளதோடு, இதில் பலியானவர்கள் அனைவருடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.

30 October 2020, 11:20