தேடுதல்

'கல்வி குறித்து உலகளாவிய ஒப்பந்தம்' – திருத்தந்தையின் செய்தி

கொள்ளைநோயிலிருந்து மீண்டுவரும் காலத்தில், கலாச்சார மாற்றத்தை உருவாக்க, கல்வி, மிக முக்கியமான கருவியாக செயல்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 கொள்ளைநோய், சமுதாயம், பொருளாதாரம், நலவாழ்வு ஆகியவற்றில் பாதிப்புக்களை உருவாக்கியதுபோலவே, கல்வியிலும் பல்வேறு எதிர் விளைவுகளை உருவாக்கியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

கல்வி குறித்து கருத்தரங்கு

உரோம் நகரில் அமைந்துள்ள இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், அக்டோபர் 15, இவ்வியாழனன்று, 'கல்வி குறித்து உலகளாவிய ஒப்பந்தம்' என்று பொருள்படும் Global Compact on Education என்ற தலைப்பில், நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பொதுவாகவே செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளுக்கு உள்ள கல்வி வாய்ப்புக்கள் ஏழைக்குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பாகுபாடு, கொள்ளைநோயினால் இன்னும் கூடுதலாக மாறியுள்ளது என்றும், இந்தக் கொள்ளைநோயினால், 25 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வி வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலாச்சார மாற்றத்தை உருவாக்க கல்வி தேவை

கொள்ளைநோயிலிருந்து மீண்டுவரும் காலத்தில், உண்மையான முன்னேற்றங்கள் நிகழ்வதற்கு, நம்மிடையே ஒரு கலாச்சார மாற்றம் உருவாகவேண்டும் என்பதை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, இந்தக் கலாச்சார மாற்றத்தை உருவாக்க, கல்வி, மிக முக்கியமான கருவியாக செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்ல, நேர்மறையான மாற்றங்களைக் கொணர்வதற்கு கல்வி சிறந்ததொரு கருவி என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயலாத்தன்மையையும், சுயநலத்தையும் இளையோரிடம் வளர்க்கும் இவ்வுலகின் பிடியிலிருந்து விடுதலை பெற்று, குழந்தைகளும், இளையோரும் நம்பிக்கையில் வளர்வதற்கு கல்வி பெருமுயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாற்றங்களைக் கொணரும் முடிவுகள்

வரலாற்றின் ஒரு சில தருணங்களில், நாம் அடிப்படை மாற்றங்களைக் கொணர்வதற்குத் தேவையான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முடிவுகள், இன்றையத் தலைமுறைக்கு மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறையினருக்கும் தேவையான முடிவுகளாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குறுக்கு வழிகளையும், உடனுக்குடன் தெரியக்கூடிய விளைவுகளையும் சொல்லித்தரும் இன்றைய கல்விமுறையிலிருந்து மாறி, நீண்டகால மாற்றங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான, பொறுமையையும், ஞானத்தையும், இளையோருக்கு வழங்குவது முக்கியம் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

அதேவண்ணம், உலக உண்மைகளை, சிறு, சிறு கூறுகளாகப் பிரித்து, நம் கவனத்தை சிறு, சிறு விடயங்கள் மீது மட்டும் செலுத்தும் கல்வியைவிட, ஒட்டுமொத்த, முழுமையான உண்மையைக் காண்பதில் நம் கவனத்தையும், சக்தியையும் திருப்பும் வண்ணம் கல்வி அமைவது முக்கியம் என்றும் திருத்தந்தை தன் உரையில் கூறியுள்ளார்.

கல்வியில் நிகழவேண்டிய மாற்றங்களைக் கொணர்வதற்கு, கலாச்சாரம், அறிவியல், விளையாட்டு, கலை, ஊடகம் என்று அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஆண்களையும், பெண்களையும் இணைத்து, இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு, தான் விண்ணப்பிப்பதாக, திருத்தந்தை, இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

ஏழு அம்சங்களில் நம் அர்ப்பணிப்பு

தன் காணொளிச் செய்தியின் நிறைவாக, ஏழு அம்சங்களில் நாம் முழுமையாக நம்மையே அர்ப்பணிக்கவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, அந்த ஏழு அம்சங்களையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

ஒன்று, கல்வி முறையின் மையமாக, மனிதர்கள் ஒவ்வொருவரின் உண்மையான மதிப்பை வலியுறுத்தப்படுவதோடு, தூக்கியெறியும் கலாச்சாரத்தை நிராகரிக்கும் கல்வியும் சொல்லித்தரப்படவேண்டும்.

இரண்டு, வருங்கால உலகை நீதியிலும், அமைதியிலும் உருவாக்கும் வழிகளை உருவாக்க, குழந்தைகள், மற்றும் இளையோரின் குரல்களுக்கும் எண்ணங்களுக்கும் செவிமடுக்கவேண்டும்.

மூன்று, சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் கல்வி உலகில் முழுமையாகப் பங்கேற்கவேண்டும்.

நான்கு, கல்வியைப் புகட்டுவதற்கு, முதன்மையான, முக்கியமான இடம், குடும்பங்கள் என்ற கண்ணோட்டம் வேண்டும்.

ஐந்து, சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றோர், ஓரங்களுக்குத் தள்ளப்பட்டோர் ஆகியோர் சமுதாயத்தில் இணைக்கப்படுவதற்குத் தேவையான கல்வி வழங்கப்படவேண்டும்.

ஆறு, முழுமனித மாண்பு, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரம், அரசியல், முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை உருவாக்கவேண்டும்.

ஏழு, நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமிக்கோளத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டி வாழும் வாழ்வுமுறையை மாற்றி, மறுசுழற்சி முறைகளையும், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளையும் பாதுகாத்து வளர்க்கக்கூடிய கல்வியை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், உடன்பிறந்த நிலையையும் உறுதிசெய்வதே, உண்மையான கல்வியின் நோக்கம் என்று தன் உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையதோர் எதிர்காலத்தை, நாம் நம்பிக்கையோடும் துணிவோடும் அணுகிச்செல்வோம் என்று கூறி, தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

16 October 2020, 08:26