தேடுதல்

கர்தினால் Anthony Soter Fernandez கர்தினால் Anthony Soter Fernandez  

கர்தினால் Fernandez கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவித்தவர்

கர்தினால் Fernandez அவர்கள், நற்செய்திக்கு பிரமாணிக்கத்துடன் சான்று பகர்ந்தது, கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடலை வளர்ப்பதில் நீண்டகாலம் தன்னை அர்ப்பணித்திருந்தது போன்ற அனைத்திற்கும் நன்றி - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 28, இப்புதனன்று இறைபதம் அடைந்துள்ள, மலேசியாவின் முதல் கர்தினால் மற்றும், தலைநகர் கோலா லம்பூர் (Kuala Lumpur) உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயருமான கர்தினால் Anthony Soter Fernandez அவர்களின் ஆன்மா நிறையமைதியடைய தான் செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் Fernandez அவர்களின் மறைவால் வருந்தும் கோலா லம்பூர் உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும், பொதுநிலையினருக்கு, தனது ஆறுதலையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும், திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

கர்தினால் Fernandez அவர்கள், நற்செய்திக்கு பிரமாணிக்கத்துடன் சான்று பகர்ந்தது, மலேசிய திருஅவைக்குத் தாராள மனதுடன் நற்பணியாற்றியது, கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும், பல்சமய உரையாடலை வளர்ப்பதில் நீண்டகாலம் தன்னை அர்ப்பணித்திருந்தது

போன்ற அனைத்திற்கும் திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த இரங்கல் தந்திச் செய்தியை, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கோலா லம்பூர் உயர் மறைமாவட்ட பேராயர் Julian Leow Beng Kim அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

கர்தினால் Anthony Soter Fernandez

88 வயது நிரம்பிய கர்தினால் Fernandez அவர்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நீண்ட காலம் நாவு புற்றுநோயால் துன்புற்று, கோலா லம்பூரில் ஏழைகளின் சிறிய அருள்சகோதரிகள் நடத்தும், புனித பிரான்சிஸ் சேவியர் நோயாளர் பராமரிப்பு இல்லத்தில், இப்புதன் பகல் 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்று, பேராயர் கிம் அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் Anthony Soter Fernandez அவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், 1932ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, Penang மறைமாவட்டத்தின் Sungai Petaniல் பிறந்தார். 1966ம் ஆண்டு அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், 1977ம் ஆண்டில் Penang மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி கோலா லம்பூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்யப்பட்ட கர்தினால் Fernandez அவர்கள், ஏறத்தாழ இருபது ஆண்டுகள் மேய்ப்புப்பணியாற்றியபின், 2003ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றார். இவர் தன் மேய்ப்புப்பணியில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தீர்மானங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டினார். இவர், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனித முன்னேற்ற அவையின் தலைவராகவும் பணியாற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற்ற திருவழிபாட்டில், இவரை, கர்தினால் நிலைக்கு உயர்த்தினார்.

மலேசியாவின் முதல் கர்தினால் Anthony Soter Fernandez அவர்களின் அடக்கச்சடங்கு, அக்டோபர் 31, இச்சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, கோலா லம்பூர் பேராலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

30 October 2020, 11:24