தேடுதல்

Gulf Livestock என்ற சரக்குக் கப்பல் Gulf Livestock என்ற சரக்குக் கப்பல் 

சரக்குக் கப்பலின் பணியாளர்களுக்கு திருத்தந்தையின் நிதி உதவி

ஜப்பானுக்கு அருகே கடலில் கவிழ்ந்த Gulf Livestock என்ற சரக்குக் கப்பலின் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிதி உதவி வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் மாதத்தில் ஜப்பானுக்கு அருகே கடலில் கவிழ்ந்த Gulf Livestock என்ற சரக்குக் கப்பலின் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிதி உதவி வழங்கியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் வழியே, திருத்தந்தை இந்த நிதி உதவியை அனுப்பியுள்ளார் என்று, இத்திருப்பீட அவை, இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இவ்வாண்டு, செப்டம்பர் 2ம் தேதி, நியூசிலாந்து நாட்டிலிருந்து சீனாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல், ஜப்பானுக்கு அருகே, Maysak என்ற சூறாவளியில் சிக்கி, தன் இயந்திரத்தின் சக்தியை இழந்து கவிழ்ந்தது.

திருத்தந்தை அனுப்பியுள்ள இந்த நிதி உதவியால், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 39 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேர், மற்றும் 2 நியூசிலாந்து நாட்டவர் ஆகியோரின் குடும்பங்கள் பயனடையும் என்று திருப்பீட அவையின் அறிக்கை கூறுகிறது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையுடன் இணைந்து செயலாற்றும் கடல் பணியாளர்கள் பணி அமைப்பான Stella Maris வழியாக இந்த உதவித் தொகை, இப்பணியாளர்களின் குடும்பங்களைச் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் உலகெங்கும் பரவியுள்ள வேளையில், திருத்தந்தை வழங்கும் நிதி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள், அமேசான் பகுதி, சீனா, பிரேசில், மியான்மார், பங்களாதேஷ், இத்தாலி, இஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

22 October 2020, 14:32