தேடுதல்

காமரூனில் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் காமரூனில் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் 

காமரூன் நாட்டு மக்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாடு

திருத்தந்தை : காமரூன் நாட்டில் பள்ளி மாணவர்கள் பலர் கொலைச் செய்யப்பட்டுள்ளது குறித்து, அவர்களின் உறவினர்கள் அடைந்துள்ள ஆழ்ந்த மனத்துயரில், நானும் பங்குகொள்கிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

காமரூன் நாட்டில் அண்மையில் இளையோர் பலர் கொலைசெய்யப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையை, புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காமரூன் நாட்டின் கும்பா என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் பலர், அடையாளம் தெரியாத மனிதர்களால் கடந்த சனிக்கிழமையன்று கொலைச் செய்யப்பட்டுள்ளது குறித்து, அவர்களின் உறவினர்கள் அடைந்துள்ள ஆழ்ந்த மனத்துயரில், தானும் பங்குகொள்வதாகத் தெரிவித்த திருத்தந்தை, கல்விநிலையத்தில் கற்றுக்கொண்டிருந்த அப்பாவி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறிச் செயல் தன்னை மிகவும் பாதித்துள்ளது என கூறினார்.

இத்தகைய கொடூரச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதிருக்கவும், காமரூன் நாட்டின் ஆங்கிலம் பேசும் பகுதிகள் அமைதியில் வாழவும் உதவும் நோக்கத்தில், இறைவன் நம் உள்ளங்களை ஒளிர்விப்பாராக எனவும் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆயுதங்கள் அமைதியாக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளின் கல்விக்கும், அவர்கள் வாழ்வதற்கும், வருங்காலத்திற்கும் உரிய உரிமைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களோடும், கும்பா நகரோடும், காமரூன் நாட்டோடும் தன் பாசம்நிறை ஒருமைப்பாட்டை அறிவிப்பதாக உரைத்து, இறை ஆறுதலை அவர்களுக்கு வேண்டுவதாக கூறினார்.

காமரூன் நாட்டின் ஆங்கிலம் பேசும் மக்கள் வாழும் தென் மேற்கு பகுதியிலுள்ள கும்பா நகரின் அன்னை பிரான்சிஸ்கா கல்வி நிலையத்தில், கடந்த சனிக்கிழமையன்று புகுந்த ஆயுதம் தாங்கிய சிலர், அங்குள்ள மாணவர்களை நோக்கி சுட்டதில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர், ஏறக்குறைய 12 பேர் காயமுற்று மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனி நாடு கேட்டு போராடிவரும் காமரூன் நாட்டின் மேற்கு பகுதியில் அரசு துருப்புகளுக்கும், ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தன் மறைக்கல்வியுரையின் இறுதியில், அங்கு குழுமியிருந்த இளையோர், முதியோர், புதுமணத் தம்பதிகள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டு, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

28 October 2020, 12:16