தேடுதல்

மூவேளை செபவுரையின்போது - 041020 மூவேளை செபவுரையின்போது - 041020 

தன் பணியாளர்களிடமிருந்து பலன்களை எதிர்பார்க்கும் இறைவன்

திருத்தந்தை : இறைவனால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பணிக்காக, அதாவது, அனைவரின் நலனுக்காக பயன்படுத்தப்படவேண்டியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கொடிய குத்தகைக்காரர் உவமையை எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் (மத் 21:33-43) குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தோட்டத்தில் பணிபுரிய அனுப்பட்டவர்களிடமிருந்து இறைவன் இன்றும் கனிகளுக்காக காத்திருக்கிறார், என்றார்.

நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு, பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது, அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பியபோது, தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, நையப் புடைத்தது, மற்றும், கொலை செய்தது பற்றி கூறும் இவ்வுவமையை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியாக நிலக்கிழாரால் அனுப்பப்பட்டு, தோட்டத்தொழிலாளார்களால் கொல்லப்பட்ட மகன், இயேசுவைக் குறிப்பதாகவும், முதலில் அனுப்பப்பட்டவர்கள், இறைவாக்கினர்களைக் குறித்து நிற்பவர்களாகவும் உள்ளார்கள் என்றார்.

இந்த உவமையைக் கூறி முடித்த இயேசு, தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கி, திராட்சைத் தோட்ட உரிமையாளர் அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? என கேட்க, அவர்கள் அவரிடம், அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விட்டு, உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த கடுமையான, கண்டிப்பான உவமையைக் கூறும் இயேசு, தலைமைக்குருக்கள் மற்றும் மக்களின் மூப்பர்களின் கடமையையையும், தன் பணியாளர்களிடம் இறைவன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதையும் குறித்து இவ்வுவமை வழி எடுத்துரைக்கிறார் என்றார் திருத்தந்தை.

இறைமக்கள் மீது அதிகாரம்கொண்டு செயல்படுபவர்கள், எல்லாக்காலத்திலும் இறைவனுக்கு ஆற்றவேண்டிய பணியை ஆற்றாமல், தங்கள் பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சோதனைகள் ஏற்படுவதுண்டு என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திராட்சைத் தோட்டம் நம்முடையதல்ல, மாறாக,  இறைவனுடையது, அங்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம், பணிக்காக, அதாவது அனைவரின் நலனுக்காகவும், நற்செய்தியை எடுத்துரைப்பதற்காவும் பயன்படுத்தப்பட வேண்டியது, என மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2020, 13:05