தேடுதல்

ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையில் திருத்தந்தை பிரான்சிஸ் ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

மனமாற்றத்தின் பயணத்தில் திறந்தமனம் கொண்டவர்களாய்...

ஏழைகள், கைவிடப்பட்டோர் என வாழ்வில் கடைநிலையில் உள்ளோர் நோக்கி இறைவனின் பணியாளர்கள், சென்று சேவையாற்றவேண்டியதை திருமண விருந்து உவமை சுட்டிக்காட்டுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவன் ஏற்பாடு செய்த திருமண விருந்துக்கு விடப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்வதுமட்டும் போதாது, மாறாக, இதயத்தை மாற்றும் மனமாற்றத்தின் பயணத்தில் திறந்தமனம் கொண்டவர்களாய் செயல்படவேண்டியது அவசியம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் செய்தபோது ஏற்பாடு செய்த திருமணவிருந்தை மையப்படுத்திய உவமையை (மத். 22:1-14), இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையின்போது குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மனித குல மீட்பிற்குரிய இறைத்திட்டத்தை இந்த உவமை எடுத்துரைக்கிறது என்று கூறினார்.

தராளமனநிலையும் சுயநலமும்

மனிதகுலத்தின் மீது இறைவன் கொண்டுள்ள தாராள மனப்பான்மையையும், அளவற்ற அன்பையும்  எடுத்துரைக்கும் இந்த உவமை, நாம் இறைவனின் அழைப்பிற்கு முதலிடம் கொடுக்காமல், நம் சுயநலன்களுக்கும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் காட்டுகிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைவருடனும் தன் இறையரசின் கொடைகளை பகிர்ந்துகொள்ள விரும்பும் இறைவன், சாலையோரங்களில் காணப்படும் அனைவரையும் அழைத்துவர தன் பணியாளர்களை அனுப்பியதைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரின் அழைப்பு மறுக்கப்படும்போது, தன் முயற்சியைக் கைவிட்டுவிடாமல், அனைவரும் தன் கொடைகளைப் பகிரவருமாறு அழைப்பதே, இறைவன் வழங்கும் பதில் என்றார்.

புறநகர் பகுதிகளில் நற்செய்தி அறிவிப்பு

சாலையோரங்களில் கண்ட அனைவரையும் அழைத்துவர இறைவன் தன் பணியாளர்களை நோக்கி பணித்தது, நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்களாக வாழும் மக்களை நோக்கிச் சென்று, நற்செய்தி அறிவிக்கவேண்டிய கடமையை நமக்கு வலியுறுத்துவதாக உள்ளது என்றார் திருத்தந்தை.

ஏழைகள், கைவிடப்பட்டோர் என, வாழ்வில் கடைநிலையில் உள்ளோர் நோக்கி இறைவனின் பணியாளர்கள் சென்று சேவையாற்றவேண்டியதை, இவ்வுவமை சுட்டிக்காட்டுவதாகவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அதற்குரிய உடையை அணிந்து செல்லவேண்டும் என இவ்வுவமையில் எதிர்பார்க்கப்படுவது, நாம் ஒவ்வொருவரும் நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் எனும் இரக்கத்தின் உடையை அணிந்து செல்லவேண்டியதை குறிக்கிறது எனவும் கூறினார் திருத்தந்தை.

இறை மீட்பின் அருளை நமக்கு வழங்க விரும்பும் இறைவன், நாம் நம் குறுகிய கண்ணோட்டங்களை விட்டு விலகி, திருமண விருந்துக்குரிய இறைவனின் அழைப்பை அனைவருக்கும் எடுத்துச் செல்பவர்களாக இருக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நண்பகல் மூவேளை செபஉரையில் கேட்டுக்கொண்டார்.

12 October 2020, 14:25