தேடுதல்

துறவு வாழ்வுக்கென பயிற்சிபெறும் பெண்களுடன் திருத்தந்தை - கோப்புப் படம் துறவு வாழ்வுக்கென பயிற்சிபெறும் பெண்களுடன் திருத்தந்தை - கோப்புப் படம் 

பெண்களின் ஆலோசனைக் குழு – திருத்தந்தையின் வாழ்த்து

மீட்பின் வரலாற்றில், பெண் ஒருவரே, இறைவார்த்தையை தன்னுள் ஏற்றார், கிறிஸ்துவின் உயிர்ப்பு என்ற நம்பிக்கையை ஒளிர்வித்தவர்கள் பெண்களே – திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீட கலாச்சார அவையின் ஒரு பகுதியாக இயங்கிவரும் பெண்களின் ஆலோசனைக் குழு, "திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை பெண்கள் வாசிக்கின்றனர்" என்ற தலைப்பில் நடத்திய ஒரு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட Evangelii Gaudium, Laudato Si’ மற்றும் Fratelli Tutti என்ற மூன்று மடல்களையும் ஆழ்ந்து படிப்பதற்கென, அக்டோபர் 7, இப்புதனன்று, கூடிவந்துள்ள இக்கருத்தரங்கு, நல்ல பலன்களை வழங்கவேண்டும் என்று திருத்தந்தை வாழ்த்தியுள்ளார்.

இக்கருத்தரங்கின் பாதுகாவலராக, புனித Hildegard அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதை, தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2012ம் ஆண்டு, திருஅவையின் மறைவல்லுனர்களில் ஒருவராக உயர்த்தப்பட்ட புனித Hildegard அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களைப் போலவே, படைப்பில் இறைவனைக் காணும் வரத்தைப் பெற்றிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி கற்பது, மற்றும், நூலகங்களை நாடிச்செல்வது ஆகியவை, பெண்களின் பணிகள் அல்ல என்று கூறப்பட்ட காலத்தில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறி, இறையியலில் உயர்ந்த அறிவைப் பெறுவதற்கு முயன்ற புனித Hildegard அவர்கள், அறிவுத்திறனில் பெண்கள் ஒளிரமுடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை கூறினார்.

மீட்பின் வரலாற்றில், பெண் ஒருவர், இறைவார்த்தையை தன்னுள் ஏற்றார் என்றும், கிறிஸ்துவின் மரணம் உருவாக்கியிருந்த இருளில், பெண்களே அவரது உயிர்ப்பு என்ற நம்பிக்கையை ஒளிர்வித்தவர்கள் என்றும் இச்செய்தியில் கூறிய திருத்தந்தை, இவ்வுலகில் நம்பிக்கையை வளர்க்க பெண்களின் பங்கு மிகவும் முக்கியம் என்று எடுத்துரைத்தார்.

ஆன்மீகத்தையும், அறிவுத்திறனையும் இணைக்கும் ஒரு முயற்சியாக நடைபெறும் இக்கருத்தரங்கு, நல்ல பலன்களைத் தரவேண்டும் என்ற வாழ்த்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

08 October 2020, 14:23