தேடுதல்

ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் 

ஐரோப்பா பற்றி கர்தினால் பரோலின் அவர்களுக்கு திருத்தந்தை மடல்

ஐரோப்பா தன்னையே மீண்டும் கண்டுணரவேண்டும், அது தன் வேர்களுக்குச் செல்லவேண்டும், ஐரோப்பா, மற்றவரை தாராளப்பண்புடன் வரவேற்று உபசரிக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (COMECE) ஆரம்பிக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு, திருப்பீடத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, ஐரோப்பிய அவையில் நிரந்தரப் பார்வையாளராக, திருப்பீடத்தின் பிரதிநிதித்துவம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு, நீண்ட மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த நிகழ்வுகளை முன்னிட்டு, அக்டோபர் 28, இப்புதன் முதல், அக்டோபர் 30, வருகிற வெள்ளி முடிய, Bruxelles நகரில் நடைபெறவிருந்த கூட்டத்தில், கர்தினால் பரோலின் அவர்கள் பங்குகொள்வதாய் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், தற்போதைய கொரோனா தொற்றுக்கிருமி பரவலால், காணொளி வழியாக, கர்தினால் பரோலின் அவர்கள் கலந்துகொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும், அதன் ஆயர் பேரவை அதிகாரிகளுடன் உரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எழுதும் திறந்த மடல் போன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் பரோலின் அவர்களுக்கு, இந்த மடலை அனுப்பியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான Robert Schuman மற்றும், ஐரோப்பா கட்டியெழுப்பப்பட்ட கிறிஸ்தவ விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதற்கு, உறுதியுடன் குரல்கொடுத்துவந்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் ஆகிய இருவரின் கனவுகள் பற்றியும், வருங்கால ஐரோப்பா பற்றிய தனது நான்கு கனவுகள் பற்றியும், மிகத் தெளிவாக, அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவுக்குத் தேவையானது பிரிவினையா அல்லது உடன்பிறந்த உணர்வா என்ற கேள்வியை எழுப்பியுள்ள திருத்தந்தை, ஐரோப்பா தன்னையே மீண்டும் கண்டுணரவேண்டும், அது தன் வேர்களுக்குச் செல்லவேண்டும், ஐரோப்பா, மற்றவரை தாராளப் பண்புடன் வரவேற்று உபசரிக்கவேண்டும், ஐரோப்பா ஒரு குடும்பமாகச் செயல்படவேண்டும் என்ற, தன் கனவுகள் பற்றிக் கூறியுள்ளார்.

ஐரோப்பா, ஒரே குழுமமாக, ஒருமைப்பாட்டிலும், மக்களோடு நட்புணர்விலும் அனைத்து மக்களை மதிப்பதிலும் வளரவேண்டும் என கனவு காண்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த மடலில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2020, 15:00