தேடுதல்

“Il Mio Papa” வார இதழ் “Il Mio Papa” வார இதழ் 

“Il Mio Papa” வார இதழில் திருதந்தையின் நேர்காணல்

கொள்ளைநோய் காலத்தில், தங்கள் சொந்த வாழ்வை முற்றிலும் மறந்து, முழுமூச்சுடன், அடுத்தவருக்காக உழைத்தவர்கள் அனைவரும், நம் 'அடுத்தவீட்டுப் புனிதர்கள்'

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எந்த ஒரு நெருக்கடியிலிருந்தும் வெளியேறும்போது, நாம் பழைய நிலைக்குத் திரும்ப இயலாது, ஒன்று, முன்னிருந்த நிலையைவிட நல்ல நிலைக்குத் திரும்புவோம், அல்லது, மோசமான நிலைக்குத் திரும்புவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்பானிய வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் நடவடிக்கைகள், மற்றும், அவர் கூறும் கருத்துக்களை மையப்படுத்தி, 2014ம் ஆண்டு, மார்ச் 5ம் தேதி, “என் திருத்தந்தை” என்று பொருள்படும் “Il Mio Papa” என்ற பெயரில், இத்தாலிய மொழியில், வார இதழ் ஒன்று துவக்கப்பட்டது. இந்த இதழின் இஸ்பானிய பதிப்பு, 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கப்பட்டது.

இஸ்பானிய பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றும் Carmen Magallón அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட ஒரு நேர்காணலில், கொள்ளைநோய் பரவல், வேதனைகளை எதிர்கொள்ளுதல், இறுதிவரை போராடுதல், எதிர்காலத்தை கட்டியெழுப்புதல், இளைய தலைமுறையினரை நினைத்துப் பார்த்தல், என்ற பல்வேறு தலைப்புக்களில், கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தன்னலம் மறந்து உழைத்தவர்கள்

இதுவரை, ஒவ்வொருவரும் அவரவர் நலனைக்குறித்து மட்டும் சிந்தித்து வந்திருந்தால், இந்தக் கொள்ளைநோய் நெருக்கடியிலிருந்து வெளியேறும் வேளையில், அடுத்தவர் நலனில் கூடுதல் அக்கறை கொள்வது மிகவும் முக்கியம் என்று, திருத்தந்தை, இந்த நேர்காணலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளைநோய் காலத்தில், தங்கள் சொந்த வாழ்வை முற்றிலும் மறந்து, முழுமூச்சுடன், அடுத்தவருக்காக உழைத்த நலப்பணியாளர்கள், காவல் துறை போன்ற பொதுநலப் பணியாளர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் ஆகிய அனைவரும், நம் 'அடுத்தவீட்டுப் புனிதர்கள்' என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

வாழ்வை வளர்க்க தங்களையே அர்ப்பணித்துள்ள இவர்களைப் பின்பற்றி, நாமும், அடுத்தவர் நலனுக்காக நம்மையே அர்ப்பணிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

எந்த ஓர் உயிரும் பயனற்றது அல்ல

சமுதாயத்தின் அனைத்து மனிதர்களும், படைப்பின் அனைத்து உயிர்களும் நம் மதிப்பைப் பெறவேண்டும், எந்த ஓர் உயிரும் பயனற்றது என்று தூக்கியெறியப்படக் கூடாது என்பதை இந்த நேர்க்காணலில் எடுத்துரைத்த திருத்தந்தை, நம்மிடையே ஆபத்தான முறையில் பரவியுள்ள தூக்கியெறியும் கலாச்சாரத்தைக் குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

மார்ச் 27 'Urbi et Orbi' சிறப்பு வழிபாட்டில்...

மார்ச் 27ம் தேதி, தவக்காலத்தின் ஒரு வெள்ளிக்கிழமையன்று, மக்கள் யாருமின்றி வெறிச்சோடியிருந்த புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய 'Urbi et Orbi' சிறப்பு வழிபாட்டை, Carmen Magallón அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டு, அவ்வேளையில் திருத்தந்தையின் உள்ளத்தில் மேலோங்கியிருந்த உணர்வைக் குறித்து கேட்டபோது, தான் அவ்வேளையில், உலக மக்கள் அனைவரையும், தன் உள்ளத்தில் ஏந்தி செபித்ததாகக் கூறினார்.

மக்கள் யாரும் பங்கேற்காத மறைக்கல்வி உரைகளை, வத்திக்கான் நூலகத்திலிருந்து வழங்கியது கடினமாக இருந்தது என்று இப்பேட்டியில் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்த நாள்களில், தன்னை வந்து சேர்ந்த கடிதங்கள், மற்றும், தொலைப்பேசி அழைப்புக்கள், மக்களுடன் தன் தொடர்பை நீட்டிப்பதற்கு பெரிதும் உதவின என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஓரங்களிலிருந்து கட்டியெழுப்பவேண்டிய எதிர்காலம்

எதிர்காலத்தை எவ்விதம் கட்டியெழுப்புவது என்ற கேள்வி எழுந்தபோது, எதிர்கால சமுதாயத்தை, ஓரங்களிலிருந்து நாம் கட்டியெழுப்பவேண்டும், அதே வேளையில், சீர்குலைந்திருக்கும் இந்த பூமிக்கோளத்தையும் கட்டியெழுப்பவேண்டும் என்று திருத்தந்தை பதிலளித்தார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் குறித்து பேசியபோது, இவர்கள் இன்றைய மனித சமுதாயத்தின் மிகப்பெரும் விழுக்காட்டினர், எனவே, இவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது, நமக்கு பெரும் இழப்பாக அமையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரித்தார்.

மனிதர்களாகிய நாம், இந்தப் பூமிக்கோளத்துடன் பிரிக்கமுடியாத வண்ணம் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை தன் பேட்டியின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, சுற்றுச்சூழலில் உருவாகும் ஒவ்வொரு மாற்றமும் நாம் செய்யத்தவறிய கடமைகளை நினைவுறுத்திய வண்ணம் உள்ளது என்றும், எனவே, நாம் ஒவ்வொருவரும், சுற்றுச்சூழல் குறித்தும், அயலவர் குறித்தும் மனமாற்றம் பெற அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

07 October 2020, 15:40