தேடுதல்

புனித 2ம் யோவான் பவுல் புனித 2ம் யோவான் பவுல்  

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், ஒரு கொடை

"புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருஅவைக்கு இறைவனால் வழங்கப்பட்ட மிகச்சிறந்த கொடை. அவரது நம்பிக்கை நம் சாட்சிய வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 22, இவ்வியாழனன்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்புனிதரின் வாழ்வில் விளங்கிய பண்புகளை சுட்டிக்காட்டி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"வாழ்வின் மீது பற்று, இறைவனின் மறையுண்மை மீதும், மனிதர்கள் மீதும் ஈர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டிருந்த புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருஅவைக்கு இறைவனால் வழங்கப்பட்ட மிகச்சிறந்த கொடை. அவரது நம்பிக்கையை நினைவுகூர்வோம். அந்த நம்பிக்கை நமது சாட்சிய வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

1920ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பிறந்த புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், தன் தலைமைப்பணியை ஏற்றுக்கொண்ட, அக்டோபர் 22ம் தேதி, அவரது திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1920ம் ஆண்டு பிறந்ததையொட்டி, அவரது பிறப்பின் 100வது ஆண்டு, இவ்வாண்டு, மே மாதம் 18ம் தேதி சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் அமைந்துள்ள இப்புனிதரின் கல்லறையில் திருப்பலி நிறைவேற்றினார்.

1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, அவரது மரணம் முடிய, 26 ஆண்டுகள், 5 மாதங்கள், 16 நாள்கள் நீடித்த திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களின் தலைமைப்பணி, திருஅவை வரலாற்றில், மூன்றாவது நீளமான தலைமைப்பணியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

22 October 2020, 14:21