தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 211020 புதன் மறைக்கல்வியுரையின்போது - 211020  (ANSA)

மறைக்கல்வியுரை: இறைவனின் கண்கொண்டு பார்க்க உதவும் செபம்

திருப்பாடல்கள் நூலில் செபம் என்பது, நல்ல, மற்றும், உண்மையான மனித வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகவும், தீமைகளின் பொறிகளிலிருந்து நம்மை காப்பாற்ற உதவும் வழிகளை நமக்கு கற்பிப்பதாகவும் உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கொரோனா தொற்றுநோய் பரவலின் அச்சம் காரணமாக, மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு, அந்நோய் தீவிரமாக இருந்த காலத்தில், தன் நூலக அறையிலிருந்து கணனி வலைத்தொடர்பு வழியாக புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் முழுவதும், வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், மக்களை நேரடியாகச் சந்தித்து உரை வழங்கி வந்தார். இம்மாதம் முதல் வாரத்திலிருந்து, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மண்டபத்தில் மக்களைச் சந்தித்து உரை வழங்கத் தொடங்கினார். செப்டம்பர் மாத இறுதிவரை,  'உலகை குணப்படுத்தல்’ என்ற தலைப்பில், தன் சிந்தனைகளை, புதன் மறைக்கல்வி உரைகளில், பகிர்ந்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் இறைவேண்டல் குறித்த புதிய ஒரு தொடரைத் துவக்கி, இப்புதனன்றும் தொடர்ந்தார். இப்புதன், அக்டோபர் 21ம் தேதி இடம்பெற்ற மறைக்கல்வி உரையில், முதலில் திருப்பாடல்கள் நூலின் 36ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதன்பின்னர், திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையை ஆரம்பித்தார்.

*பொல்லாரின் உள்ளத்தில்*

தீமையின் குரல்

ஒலித்துக் கொண்டே இருக்கின்றது;

அவர்களின் மனக்கண்களில்

இறையச்சம் இல்லை.

ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு

வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என,

இறுமாந்து தமக்குத்தாமே

பெருமை பாராட்டிக்கொள்கின்றனர்.

அவர்கள் வாயின் சொற்கள்

தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை;

நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை

அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர்.

படுக்கையில் கிடக்கையில் அவர்கள்

சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர்,

தகாத வழியை

உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்;

தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை. […]

ஆண்டவரே, உமது நீதி

இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது;

உம் தீர்ப்புகள் கடல்போல்

ஆழமானவை; […]

கடவுளே, உமது பேரன்பு

எத்துணை அருமையானது!

மானிடர் உம் இறக்கைகளின் நிழலில்

புகலிடம் பெறுகின்றனர்.

உமது இல்லத்தின் செழுமையால்

அவர்கள் நிறைவு பெறுகின்றனர்;

உமது பேரின்ப நீரோடையில்

அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். (தி.பா. 36)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே சகோதரிகளே, திருப்பாடல்களில் செபம் குறித்த நம் சிந்தனைகளை, இன்று மீண்டும் ஒருமுறை திருப்பாடல்களைத் தியானிப்பதோடு முடிவுக்குக் கொணர்வோம். திருப்பாடல்கள் நூலில் செபம் என்பது, நல்ல, மற்றும், உண்மையான மனித வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகவும், தீமைகளின் பொறிகளிலிருந்து நம்மை காப்பாற்ற உதவும் வழிகளை நமக்கு கற்பிப்பதாகவும், இறைவிருப்பத்தின் பாதையில் நாம் நடந்திட நமக்கு வழிகாட்டுவதாகவும் விளங்குகிறது. செபம் என்பது, நம் துயர்நிறைந்த வேளைகளில்கூட, உண்மை நிலைகளை இறைவனின் கண்கொண்டு பார்க்கவும், நம் சகோதரர், சகோதரிகளை கருணையோடும், அவர்களுக்கேயுரிய மதிப்போடும் நோக்கவும்   நமக்கு உதவுகிறது. திருப்பாடல்களில் தனியார் செபங்களும், குழு செபங்களும் ஒன்றிணைவதைக் காண்கிறோம். இங்கு, கடவுளைப் போற்றிப் புகழ்வது என்பது, மற்றவர்கள் மீது, குறிப்பாக ஏழைகள், மற்றும், உதவித் தேவைப்படுவோர் மீது நாம் கொள்ளவேண்டிய அக்கறையோடு இணைந்து செல்கிறது. தனியொரு மனிதரின் செபங்களாக திருப்பாடல்களில் காணப்படுபவைகூட, ஆலயங்களின், மற்றும், யூத செபக்கூடங்களின் வழிபாட்டு நிகழ்வுகளிலும், பின்னர், ஆதிகால கிறிஸ்தவர்களின் சந்திப்புக்களின்போதும் பயன்படுத்தப்பட்டதைக் காண்கிறோம். இவ்வுலகில் நம் வாழ்வின் அனைத்து நிலைகளையும், செபமானது ஆரத்தழுவி அணைத்துச் செல்ல வேண்டும் என்பதை, திருப்பாடல்கள் நமக்கு நினைவூட்டி வருகின்றன. சிலவேளைகளில், செபமானது, ஆலயங்களில் துவக்கப்பட்டு, நம் நகர்களின் தெருக்களில் வாழும் மக்களுக்கு சேவைபுரிய நம்மை வழிநடத்திச் செல்கின்றது. ஏனைய வேளைகளில், நம் தினசரி பணிகளின் மத்தியில் துவங்கும் செபம், ஆலய வழிபாட்டில் தன்  நிறைவைக் காண்கிறது. கடவுள் மீது அன்பிலும், அவரது மீட்புத் திட்ட நிறைவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையிலும், நம் சகோதரர்கள் சகோதரிகள் மீது கொள்ளும் பிறரன்பிலும் வளர்ந்திடும் ஆவலுடன் நாம் செயல்படும் வேளையில், திருப்பாடல்களின் குரல்கள் நம் குரலாக மாறிட அனுமதித்து, மேலும் உள்ளுணர்வுடன் செபிக்கக் கற்றுக் கொள்வோமாக. 

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் அக்டோபர் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து நினைவூட்டினார். மறைப்பரப்புப்பணி மாதமாகிய இந்த மாதத்தில், இறையரசை அறிவிப்பதற்குரிய நம் கடமைக்கு விடப்பட்டுள்ள அழைப்பை உணர்ந்து செயல்படுவோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் நம் வார்த்தைகளாலும் வாழ்வு நடவடிக்கைகளாலும் நற்செய்தியை எடுத்துரைக்கும் மனவுறுதியுடன் செயல்படுவோமாக என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை. மறைக்கல்வி உரையின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

21 October 2020, 12:04