தேடுதல்

பன்னாட்டு, பலசமயக் கூட்டத்தில் திருத்தந்தை வழங்கிய உரை பன்னாட்டு, பலசமயக் கூட்டத்தில் திருத்தந்தை வழங்கிய உரை  (ANSA)

அமைதி, இன்னும் கூடுதலான அமைதி இவ்வுலகிற்குத் தேவை

போர் மற்றும் வெறுப்பு என்ற தீமைகளுக்கு முன், செயலற்று நிற்காமல், மதநம்பிக்கையாளர்கள் அமைதியை உருவாக்குபவர்களாக செயல்பட வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்பிக்கையின் வலிமையைக் கொண்டு, அனைத்து மோதல்களையும் முடிவுக்குக் கொணர்வதற்கு, அனைத்து மதத்தலைவர்களையும் நான் அழைக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 20, இச்செவ்வாய் மாலை நடைபெற்ற ஒரு பன்னாட்டு, பலசமயக் கூட்டத்தில் கூறினார்.

"எவரும் தனியாகக் காப்பாற்றப்படுவதில்லை. அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு" என்ற தலைப்பில், உரோம் நகரின் Campidoglio குன்றில் அமைந்துள்ள காப்பித்தோலீனே (Capitoline) சதுக்கத்தில், ‘சான் எஜிதியோ’ என்றழைக்கப்படும் பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு, பலசமயக் கூட்டத்தின் ஆரம்பத்தில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருஅவை வரலாற்றில் முதல் முறையாக, பல்வேறு மதத்தலைவர்களுடன், உலக அமைதி வேண்டி, 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி, அசிசி நகரில் நடத்திய முதல் பல்சமயக் கூட்டத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அறிமுக உரையின் துவக்கத்தில் நினைவுகூர்ந்தார்.

அந்தக் கூட்டம், உலகில் நம்பிக்கை விதையொன்றை ஊன்றியது என்று கூறியத் திருத்தந்தை, அதைத் தொடர்ந்து, இறைவன் அருளால், உலகில், அமைதியையும், உடன்பிறந்த உணர்வையும் வளர்க்க, பல்வேறு மதத்தலைவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதைக் குறித்து, தன் மகிழ்வை வெளியிட்டார்.

அமைதி மற்றும் உடன்பிறந்த நிலைப் பணியில் மதங்கள்

2019ம் ஆண்டு அல் அசார் தலைமை குரு, அஹ்மத் அல்-தய்யீப் அவர்களுடன் தான் உருவாக்கிய உடன்பிறந்த நிலை என்ற அறிக்கை குறித்தும், அண்மையில் தான் வெளியிட்ட "அனைவரும் உடன்பிறந்தோர்" (Fratelli tutti) திருமடலைக் குறித்தும் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியைப் பற்றிய கட்டளை, ஒவ்வொரு மதப் பாரம்பரியத்திலும் ஆழப்பதிந்துள்ளது என்று கூறினார்.

மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், நமக்குள் பகைமையை உருவாக்கக்கூடாது என்பதை, மத நம்பிக்கையாளர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்று தன் உரையில் கூறிய திருத்தந்தை, போர் மற்றும் வெறுப்பு என்ற தீமைகளுக்கு முன், செயலற்று நிற்காமல், மதநம்பிக்கையாளர்கள் அமைதியை உருவாக்குபவர்களாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அக்கறையற்றிருக்கும் நிலைக்குப் பதிலாக, அமைதி, இன்னும் கூடுதலான அமைதி இவ்வுலகிற்குத் தேவை என்ற உணர்வுப்பூர்வமான விண்ணப்பத்தை, திருத்தந்தை தன் உரையில் விடுத்தார்.

போர் என்ற தீமையை வளர்க்கும் அக்கறையற்ற நிலை, கொள்ளைநோய்

பல நாடுகளில் நடைபெற்றுவரும் போர்களைக் குறித்த செய்திகள் நமக்கு பழக்கமாகிப் போனதால், அவற்றைக் குறித்து நாம் அதிகம் அக்கறை கொள்ளாமல் போகும் ஆபத்து உள்ளது என்ற எச்சரிக்கையை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர், மற்றும் கொள்ளைநோயைக் குறித்து, வெறும் ஏட்டளவு விவாதங்களில் சிக்கிக்கொள்ளாமல், இந்த கொடுமைகளால் துன்புறுவோரின் காயப்பட்ட உடல்களைத் தொடுவதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அமைதி, அரசியலின் முதன்மை நோக்கமாக...

அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொணர்வதும், அமைதியை நிலைநாட்டுவதும் அனைத்து அரசியல் தலைவர்களின் முதன்மையான கடமை என்பதை, தன் உரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத். 26:52) என்று இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்தார்.

பிரச்சனைகளுக்கு, போர்க்கருவிகள் தீர்வு தரும் என்று எண்ணுபவர்கள், தங்கள் வாழ்வும், தங்களுக்கு நெருங்கியவர்கள் வாழ்வும் எவ்வளவுதூரம் பாதிக்கப்படும் என்பதை உணரவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களிடம் உள்ள வாள்களைக் குறித்து பேசிய சீடர்களிடம், "போதும்" (லூக். 22:38) என்று இயேசு கூறியதையும், "இனி போரே வேண்டாம்!" என்று திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறியதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

இவ்வுலகிற்கு அமைதி என்ற செய்தியை அனுப்பவும், மதங்கள் போரை விரும்பவில்லை என்பதையும், வன்முறையை அரியணையேற்றுவோரை ஏற்றுக்கொள்வதில்லை என்பதைக் கூறவும் பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளாகிய நாம் இன்று இவ்விடத்தில் கூடிவந்துள்ளோம் என்பதை தன் உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்பவும், நாம் அனைவரும் சகோதரர்களாக, சகோதரிகளாக இணைவதன் வழியே காப்பாற்றப்படவும் இறைவனின் உதவியை இறைஞ்சுகிறோம் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அறிமுக உரையை நிறைவு செய்தார்.

21 October 2020, 15:10