தேடுதல்

கர்தினால்களின் ஆலோசனைக் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் கர்தினால்களின் ஆலோசனைக் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (© Vatican Media)

கர்தினால்களின் 34வது ஆலோசனைக் கூட்டம் மெய்நிகர் வடிவில்...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வாழும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, கணணி வழியே, கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்றார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்தின் மறுசீரமைப்பு முயற்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட கர்தினால்களின் ஆலோசனைக் குழு, அக்டோபர் 13, இச்செவ்வாயன்று உரோம் நேரம் மாலை நான்கு மணி முதல், திருத்தந்தையுடன் இணைந்து மெய்நிகர் கூட்டம் ஒன்றை கணணி வழியே மேற்கொண்டது.

இவ்வாண்டு பிப்ரவரி 17 முதல், 19ம் தேதி முடிய, அதாவது, கோவிட் 19 கொள்ளைநோயின் உலகளாவிய பரவலுக்கு முன் நடைபெற்ற 33வது கூட்டத்திற்குப் பின், தற்போது 34வது கூட்டம் மெய்நிகர் வடிவில் நடைபெற்றது.

கர்தினால்கள் ஆஸ்கர் ரொட்ரிகெஸ் மாராதியாகா, ரெய்ன்ஹார்டு மார்க்ஸ், ஜான் பேட்ரிக் ஒ’மாலி, ஆசுவால்டு கிரேசியஸ் ஆகியோர், அவரவர் வாழும் நகரங்களிலிருந்து இந்த மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்றனர்.

வத்திக்கானிலிருந்து, கர்தினால்கள் பியெத்ரோ பரோலின், மற்றும் ஜூசப்பே பெர்த்தெல்லோ ஆகியோரும், ஆயர்கள் மார்சேல்லோ செமெராரோ மற்றும் மார்கோ மெல்லினோ ஆகியோரும் இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வாழும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, கணணி வழியே இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், திருப்பீடத்தின் மறுசீரமைப்பு சார்ந்த பரிந்துரைகளை கடந்த மாதங்களில் ஆழ்ந்த முறையில் வாசித்து, அவற்றைக் குறித்த தங்கள் கருத்துக்களை, இந்த கலந்துரையாடலில் பதிவு செய்தனர்.

இந்த ஆலோசனைக்குழுவின் அடுத்தக் கூட்டம், மீண்டும் மெய்நிகர் வடிவில், வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14 October 2020, 14:39