தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

55வது சமூகத் தொடர்பு உலக நாள் கருப்பொருள்: “வந்து பாரும்”

ஊடகத் துறையில் பணியாற்றுவோர், அனைத்துவிதமான ஊடகங்களைப் பயன்படுத்துகையில், மக்களை, அவர்கள் இருக்கும் நிலையிலும், அவர்கள் வாழ்கின்ற இடங்களிலும் சென்று சந்திப்பதற்கு, அழைப்புப் பெறுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 55வது சமூகத் தொடர்பு உலக நாளுக்கு வெளியிடும் செய்திக்கு, “வந்து பாரும்” (யோவா.1,46) என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று செப்டம்பர் 29, இச்செவ்வயான்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்த பிலிப்பு, நத்தனியேலிடம், “வந்து பாரும்”  என்று சொல்லியே இயேசுவை அவருக்கு அறிமுகப்படுத்தினார் (யோவா.1,43-46).

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார். அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார். இவ்வாறு யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா கொள்ளைநோயால் சமுதாய விலகல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், முக்கியமானது எது என்பதை ஏற்கவும், பொருள்களின் அர்த்தத்தை, உண்மையாகவே புரிந்துகொள்ளவும், சமூகத்தொடர்புகள் உதவுகின்றன என்று, இத்தலைப்பை வெளியிட்ட திருப்பீட அறிக்கை கூறுகின்றது.    

உண்மையை நாம் அனுபவிக்காவிட்டால், அதை அறிந்துகொள்ள முடியாது என்றும், மக்களைச் சந்திக்காவிட்டால், அவர்களின் இன்ப துன்பங்களில் நம்மால் பங்குகொள்ள இயலாது என்றும் கூறியுள்ள திருப்பீடம், "நீ எங்கே இருக்கிறாயோ அங்கே கடவுள் உன்னைச் சந்திக்கிறார்" என்ற கூற்று, திருஅவையில் ஊடகத்துறையில் அல்லது, சமூகத்தொடர்புத் துறையில் பணியாற்றுவோருக்கு வழிகாட்டியாக உள்ளது என்று கூறியுள்ளது.

இயேசு தம் முதல் சீடர்களை அழைக்கையில், அவர்களை நேரில் சென்று சந்தித்து, தம்மைப் பின்செல்லுமாறு அழைத்தார், அதேபோல், நாமும், எல்லாவிதமான ஊடகங்களையும் பயன்படுத்துகையில், மக்களை, அவர்கள் இருக்கும் நிலையிலும், அவர்கள் வாழ்கின்ற இடங்களிலும் சென்று சந்திக்க அழைப்புப் பெறுகிறோம் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2020, 13:31