தேடுதல்

Vatican News
TerraFutura புதிய நூல் TerraFutura புதிய நூல் 

திருத்தந்தையின் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்ணோட்டம்

“TerraFutura” என்ற புதிய நூல், திருத்தந்தையின் போதனைகளுக்கு ஒத்திணங்கும் முறையில், இந்த பூமிக்கோளமும், அதன் மக்களும் இணக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்ணோட்டம் குறித்து, சூழலியல் ஆர்வலர் கார்லோ பெத்ரினி (Carlo Petrini) அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், “TerraFutura” அதாவது வருங்காலப்பூமி என்ற தலைப்பில், ஒரு புதிய நூலாக, செப்டம்பர் 09, இப்புதனன்று விற்பனைக்கு வருகின்றது.

“Slow Food” எனப்படும் உலகளாவிய அரசு-சாரா அமைப்பை உருவாக்கியவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பெத்ரினி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட மூன்று கலந்துரையாடல்கள், இத்தாலிய மொழியில், நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன.

மூன்று கலந்துரையாடல்கள்

முதல் கலந்துரையாடல், 2018ம் ஆண்டில், மத்திய இத்தாலியில் இடம்பெற்ற கடுமையான நிலநடுக்கத்தின் பின்புலத்திலும், இரண்டாவது கலந்துரையாடல், 2019ம் ஆண்டில், அமேசான் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் துவங்குவதற்கு முன்னும், மூன்றாவது கலந்துரையாடல், 2020ம் ஆண்டில் கோவிட்-19 கொள்ளைநோய் சூழலிலும் நடைபெற்றுள்ளன.

பல்லுயிர்கள், பொருளாதாரம், புலம்பெயர்வு, கல்வி, குழுமம் ஆகிய ஐந்து பல்வேறு தலைப்புக்களில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் போதனைகளுக்கு ஒத்திணங்கும் முறையில், இந்த பூமிக்கோளமும், அதன் மக்களும் இணக்கப்படவேண்டும் என்று, இந்த நூல் அழைப்பு விடுக்கின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில் வெளியிட்ட, “Laudato Sí” என்ற தனது திருமடலில், உலகில் நிலவும், அழிவை உருவாக்கும் நடைமுறைகள், சமுதாய மற்றும், சுற்றுசூழல் அநீதிகளுக்குப் பரவலாக இட்டுச்செல்வதை மாற்றி, நம் பொதுவான இல்லமாகிய இந்த பூமியைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள நமக்கு அழைப்பு விடுத்திருப்பதை, பெத்ரினி அவர்கள், இந்த புதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல்

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை அடிப்படையாக வைத்து, திருத்தந்தையும், பெத்ரினி அவர்களும், ஒளிவுமறைவின்றி, நட்புணர்வுடன் மேற்கொண்ட இந்த மூன்று கலந்துரையாடல்களில், இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் மதிக்கப்பட்டு, அவற்றின் மீது கவனம் செலுத்தப்படுவதற்கு, நம் அனைவரின் பங்களிப்புகள் குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

“Slow Food” என்ற அமைப்பு

1989ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “Slow Food” என்ற அமைப்பு, வளர்ந்துவரும் துரித உணவு நுகர்வுக் கலாச்சார சூழலில், அந்தந்த இடத்து உணவுக் கலாச்சாரமும், மரபுகளும் பாதுகாக்கப்படுவதற்காக பணியாற்றி வருகிறது.

இந்த இயக்கம், மக்களின் நடத்தை, உணவு உற்பத்தி, நுகர்வுத்தன்மை, பொருளாதாரம், பூமிக்கோளம் ஆகியவற்றுக்கிடையே உறுதியான தொடர்பு உள்ளது என்பதை ஏற்று, மக்களின் உணவுப் பழக்கம், மற்றும், வாழும்முறையில் நலமான அணுகுமுறையை ஊக்குவித்து வருகிறது.

09 September 2020, 14:44