படைப்பின் காலத்தையொட்டி டுவிட்டர் செய்தி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இம்மாதம் முதல் தேதியிலிருந்து, இயற்கையின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் விழாவான அக்டோபர் 4ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் படைப்பின் காலத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 11, இவ்வெள்ளியன்று, டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நம்பிக்கையாளர்கள் என்ற முறையில், நம் இறைத்தந்தை, அனைத்து உயிர்களோடும் நம்மைத் தொடர்புபடுத்தியுள்ளதை உணர்ந்தவர்களாய், இந்த உலகை, வெளியிலிருந்து அல்ல, மாறாக, உள்ளேயிருந்து நோக்கவேண்டும்” என்ற சொற்கள், படைப்பின் காலம் #SeasonOfCreation என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், செப்டம்பர் 11, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில், திருப்பீடத்தின் ஈராக் நாட்டு புதிய தூதர் Rahman Farhan Abdullah Al-Ameri அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்களையும், திருப்பீட தூதர் பேராயர் Adriano Bernardini அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
“இறையியலும் குற்றத் தடுப்பும்”
மேலும், கத்தோலிக்கத் திருஅவையில் இடம்பெறும் பாலியல் முறைகேடுகள் குறித்து, அண்மையில் வெளியிடப்பட்ட “இறையியலும் குற்றத் தடுப்பும் – திருஅவையில் பாலியல் முறைகேடுகள் குறித்த ஓர் ஆய்வு” என்ற நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முகவுரை எழுதியுள்ளார்.
பாலியல் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடுவது என்பது, அனைவரின் வாழ்வு மதிக்கப்படவேண்டும், குறிப்பாக, தங்களுக்காக குரல்எழுப்ப இயலாமல் இருக்கும் மிகவும் நலிந்தவர்களின் வாழ்வு மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அறிவிப்பதாகும் என்று திருத்தந்தை, தனது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அருள்பணி Daniel Portillo Trevizo அவர்கள் எழுதிய, “இறையியலும் குற்றத் தடுப்பும் –திருஅவையில் பாலியல் முறைகேடுகள் குறித்த ஓர் ஆய்வு” என்ற நூல், அண்மையில், இஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.